கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதைகள்

நீ முதல் நான் வரை

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

 

வெற்றி பெற 
வாழ்த்துகிறேன் 

வெளிப்படையாய் 
கைகுலுக்குகிறேன் 

வெற்றிபெற்று வருகையிலோ 
உள்ளுக்குள் பொருமுகிறேன் 
உதட்டளவில் பாராட்டுகிறேன் 

என்னிலும் ஒருபடி 
ஏறிவிடாதபடி 
எச்சரிக்கையாய் இருக்கிறேன் 

முட்டி மோதி 
மூச்சுத் திணறுகையில் 
குழிபறிக்க வழிபார்க்கிறேன் 

முயன்று முன்செல்கையில் 
குறிவைக்க வெறி கொள்கிறேன் 

எல்லாரையும் விழுங்கி ஏப்பம் விடும் 
இந்த மனித நாடகத்தில் 
என் பாத்திரம் எம்மாத்திரம் ? 

அதைமட்டும் ஏனோ 
அவ்வப்போது மறந்துவிடுகிறேன். 

 

சகாரா 

Add a comment

முற்றுப் பெறும் கவிதை

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

பொது வெளி என்றான தருணங்களில்
எது அந்தரங்கம்?
நான் என்னுடன்.
நான் உன்னுடன்.
நாம் நினைவுகளுடன்.
கவிதைக்கான குறிப்புகள்
கனவுகளில் கவிழ்வதைப் போல்
கவிழ்கின்றன.
பிறிதொரு நாளில்
பிரபஞ்சப் பாழ்வெளியில்
எனக்கான கவிதைகளில்
உனக்கான குறிப்புகள் இருக்கும்.
எனக்கான மரணத்தில்
யாரும் அறியா
உன் கண்ணீரின் ஈரத்துளிகளில்
கவிதையும் முற்றுப் பெறும்.

- அரிஷ்டநேமி

Add a comment

மழைக்குப்பின் பூக்கும் சித்திரம்

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

பெய்யெனப்

பெய்யும் மழை

என்பது போல்

சொல்லெனச் சொன்னவுடன்

வெடித்து வடிக்க

என்னிடம் ஒன்றும்

கவிதைக் கற்பு இல்லை.

 

குளிர்ந்து இறங்கும்

மேகத்தாரை

காற்றுடன் மோகித்துச்

சல்லாபிக்கும்

ஆனந்தக் கூத்தை

ரசிப்பது மட்டுமே

மழைத் தருணங்களுக்கு

நான் தரும் மரியாதை

என்றிருப்பினும்

இடியையும் மின்னலையும் போல

மழைக் காற்றின்

மூர்க்க முயக்கத்தை

வியந்து சொல்லும்

விந்தையாற்றலும் என்னிடம் இல்லை

 

எனக்குள்

எங்கெங்கோ சிதறிக் கிடக்கும்

சின்னச்சின்ன வார்த்தைகளை

மழை முடிந்து

அடங்கின பின்தான்

கோர்க்க முடிகிறது

 

மழையின் நினைவாய்த்

தேங்கி நிற்கும்

குட்டை நீரில்

குழம்பி நிற்கிற

கூளத்தின் நடுவில் மிதக்கும்

ஒரு காட்டுப்பூ போல

எனக்குள்ளும்

மழையின் பின் நினைவாய்

ஒரு கவிதை நிற்கலாம்.

என்றாலும்

ஒரு குடை, ஒரு மங்கை

இவற்றோடு நானும் என்ற

ஓர் அமைதியான

சித்திரக் காட்சியாக

மழை நாட்கள்

எனக்குள் தீட்டிவிட்டுச் செல்லும்

சந்தோஷம்

மழை இல்லாத நேரங்களிலும்

சாரல் தெளித்துவிட்டுப் போகும்

 

- ரமணி

Add a comment

பொருள்வயிற் பிரிதல்

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

 

மூங்கில்களுக்கிடையே 
வெளிச்சப்புள்ளியென நீ கடந்து சென்றதைக் 
கண்களில் நிறைத்து, 
முகிழ்த்து இயம்புகிறது என் திசைவழி, 

வயல் வெளியின் பசுமையொத்து, 
நிர்பந்தித்தலுடன் கிடக்கிறது என் மௌனம்,, 

பிரிவின் ரேகை படிந்த வார்த்தைகளை, 
நம் சேய்களோடு முணுமுணுத்தபடி, 
கடந்து செல்கிறது களிப்பற்ற பொழுது,, 

நீயற்ற நம் நிலத்தினை, 
நீயற்ற நம் நதியினை, 
நீயற்ற் நம் இரவினை, 
அழித்தொழிக்காமல் பிணைத்திருக்கிறது, 
எமக்கு உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி,, 

நீ கடந்து சென்ற ஸ்தலமெங்கும், 
முளைத்தெழும்பிப் படர்கிறது 
உன் விளைவித்தல்,, 

ஒரு நீரோட்டத்தினைப்போல் 
நிகழ்ந்திருக்கும் உன் நகருதலில், 
கானல் வரிப்பாடலொன்றை இசைக்கும்,, 
தன் மீட்பின் அனுமானங்களுடன் 
இடும்பை விழையாப் பறவை

அ.ரோஸ்லின்

Add a comment

சோதனைச்சாவடி

பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

பொறுமையை சோதிக்காதீர்கள் 
உங்கள் பக்கம் 
உண்மை இருந்தால் 
மௌனமாக இருந்துவிடுங்கள் 


பேதம் பார்க்காதீர்கள் 
இறந்த பின்பு பிணம் தான் 
என்பதை ஞாபகம் 
வைத்துக் கொள்ளுங்கள் 


நெருக்கடிக்கு உள்ளாகாதீர்கள் 
எய்யப்பட்ட அம்புகளும் 
சொல்லப்பட்ட வார்த்தைகளும் 
எதிராளியை 
காயப்படுத்தாமல் விடாது 


ஒத்தி வைக்காதீர்கள் 
உங்களுக்கான வாய்ப்பை 
இழந்து நிற்காதீர்கள் 


சந்தர்ப்பத்தை நழுவவிடாதீர்கள் 
வாய்ப்பு இன்னொருமுறை 
உங்கள் கதவைத தட்டாது 


போதையில் மிதக்காதீர்கள் 
பிறர் மனையை 
கவர்ந்து இழுக்காதீர்கள் 


பாதையை வகுக்காதீர்கள் 
கடலில் விழும் மழைத்துளிக்கு 
முகவரி உண்டா கேளுங்கள் 
யோசனை செய்யாதீர்கள் 
காகிதங்கள் குப்பையாகலாம் 
அதற்காக வருத்தப்படாதீர்கள்

 
உலகமே சோதனைச் சாலைதான் 
நாமெல்லாம் பரிசோதனை 
எலிகள் தான் என்பதை 
நினைவில் கொள்ளுங்கள் 


ஆண்மை தவறாதீர்கள் 
வாய்ப்பு கிடைத்தால் 
ஒழுக்கம் தவறும் 
நீச புத்திக்காரர்கள் 
நிறைய பேர் இருக்கிறார்கள் 
பாருங்கள்

கதவைத் தட்டாதீர்கள் 
உள்ளே பிரார்த்தனை 
ஏறெடுத்துக் கொண்டிருப்பதை 
காது கொடுத்துக் கேளுங்கள் 
பாவம் செய்து தொலைக்காதீர்கள் 
இந்தச் சிறைச்சாலைக்குள் 
மீண்டும் சிக்கித் தவிக்காதீர்கள். 

- ப.மதியழகன்

Add a comment

நண்பனுக்கோர் கடிதம்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

உறவுகளின் அடைப்புக்குள் சுற்றிக்கொண்டிருந்தேன் 

சுற்றிலும் வேலிகளாய் மனிதர் 

 

வேலி தகர்ப்பு இந்தியத்தெருக்களில் 

என் புதிய அத்தியாயங்களுக்காய் 

நண்பர்கள் வந்தனர் 

இப்படித்தான் நீயும் நானும் 

சந்தித்துக்கொண்டோம் 

 

பல வேடிக்கை கதைகள் பேசினோம் 

ஈழவிடுதலையும் ரஸ்சியாவில் இருந்து 

அமெரிக்காவையும் அலசித்தொலைத்தோம் 

கற்பனைத் தொலைநோக்கியில் 

அண்டங்களின் அறியாத முகங்களை 

அறிய முற்பட்டோம் 

 

போயின நண்பனே யாவும் 

காலம் கொடிது வாழ்வின் துயர்களை 

மீண்டும் எமக்குள் புதைத்துக்கொள்ள 

திசைதப்பிய புலம் பெயர் பறவையாய் 

நீயும் நானும் எங்கோ தொலைந்தோம் 

 

மீண்டும் ஒருமுறை 

சில மாற்றங்களுடன் நானும் நீயும் 

தொலைந்துவிட்ட மகிழ்ச்சியுமாய் 

புதிய அத்தியாயங்களுக்காய் காத்திருக்கிறோம் 

பேசுவதற்காக அகதி வாழ்வு 

இலக்கியம் இனவாதம் தமிழ் 

பண்பாடு என்று விடிந்துசெல்லும் 

 

மீள்வோம் நண்பனே ! 

வானத்தின் எல்லைகளை 

தொடுவதற்காய் முறிந்துவிட்ட 

சிறகுகளை பழுதுபார்ப்போம் 

 

- மாலியன்

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி