கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதைகள்

தினந்தோறும் தீபாவளி

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

வறுமை துயர் நீங்க வேண்டும்
வாசல்தோறும் வளங்கள்
வழிய வேண்டும் – என்ற
மீட்பின் குரலோடு
அரியணையில் அமர்ந்தோர்
வாக்குறுதிகள் காற்றில் கலக்காது
வாணவேடிக்கையாய் – பல
வண்ணங்களில் மின்ன வேண்டும்!

‘ஆட்டம் பாமாய்’ வெடித்து
நாள்தோறும் பயமுறுத்தும்
விலைவாசி ஏற்ற இறக்கங்கள்
வாழும் வேட்கையை-
தகர்க்காது காக்க வேண்டும்!

நிம்மதி – சரவெடியாய்
படபடத்துச் சரியாமல்
சிந்தை பூக்கும் ஆசைகள்
அணை தாண்டி மகிழ வேண்டும்!

மதுவில் மயங்கி – உழைத்தும்
வீடு சேரா ஊதியத்தால் – பசி
பட்டினிச் சாவெனும் அவலங்கள்
சங்குச்சக்கரமாய் – நித்தமும்
வாழ்வை சுற்றாத நிலை வேண்டும்!

சின்னச்சின்ன
ஆசைகளின் வண்ணக்
கனவுகளில் மத்தாப்பூ சிதறல்கள்
பூத்துச் சிரிக்க வேண்டும்!

பொய், புரட்டு, சூது, லஞ்சமென
புதுப்புது முகமூடிகளுடன்
திரை மறைவு பொம்மலாட்டங்கள்
எரி குச்சியாய் கரைய
புது உதயம், புது வாழ்வென
புத்துணர்ச்சி பொங்க வேண்டும்!

எண்ணங்கள் – மறந்து
ஆசைகள் – துறந்து
வாழும் வழிகள் – இழந்து
வாசல் விட்டு வீதியில் தவித்தலின்றி
கிழக்கு வெளுக்கும் நாௌல்லாம்
எம்மக்களுக்கு – தினந்தோறும்
தீபாவளியாக வேண்டும்!

- செல்லம் ரகு, திருப்பூர்.

Add a comment

சொல்லதிகாரம்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

 

'கொல்' 'கொள்ளையடி'
சரித்திரம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''தழுவு'' ''முத்தமிடு''
கட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''ஆராரோ'' ''சனியனே''
தொட்டில்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உனக்கெப்போது கல்யாணம்?''
விலைமகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''உருப்போடு'' - உருப்படமாட்டாய்''
வகுப்பறைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''இன்னொரு ஜென்மம்
என்றொன்றிருந்தால்''
பூங்காக்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''கடைசியாய் எல்லாரும்
முகம்பார்த்துக் கொள்ளுங்கள்''
மயானங்கள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''சவால் விடுகிறேன் - சபதம் செய்கிறேன்'
மேடைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'பாலாறு - தேனாறு'
பொதுஜனம் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''மறக்காமல் கடிதம் போடு''
ரயிலடிகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

''அய்யா குளிக்கிறார்''
தொலைபேசி அதிகம் கேட்ட வார்த்தைகள்

'அப்பா கோபமாயிருக்கிறார்'
குழந்தைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'தயவுசெய்து' - 'மன்னியுங்கள்'
ஐரோப்பா அதிகம் கேட்ட வார்த்தைகள்

''நேற்றே வந்திருக்கக் கூடாதா''
கடன் கேட்போன் அதிகம் கேட்ட வார்த்தைகள்

'இனிமேல் ஆண்டவன் விட்ட வழி'
மருத்துவமனைகள் அதிகம் கேட்ட வார்த்தைகள்

 

 


போதுமடா சாமி!
போதும்! போதும்!

ஒரே கல்லில் துவைத்துத் துவைத்துச்
சாயம் போயின வார்த்தையின் நிறங்கள்

 

இனி ஒவ்வொரு சொல்லையும்
ஒட்டடை தட்டுவோம்

 

இனிமேல் வார்த்தைகளை
இடம் மாற்றிப் போடுவோம்

அத்தனை சொல்லிலும்
ஆக்சிஜன் ஏற்றுவோம்

வார்த்தை மாறினால்
வாழ்க்கை மாறும்

 

 


முதலில்
வாழ்க்கையிலிருந்து
வார்த்தையை மீட்போம்
பின்னர்
அர்த்தத்திலிருந்து
வார்த்தையை மீட்போம்

வாழ்வின் நீள அகலம் கருதி
வார்த்தைகளிலும் நாம்
மழித்தல் நீட்டல் செய்வோம்

மரித்தான் என்ற சொல்லை யெறிந்து
வாழ்வை வென்றான் என்று புகல்வோம்

தோல்வி என்னும் சொல்லைத் தொலைத்து
விலகி நிற்கும் வெற்றியென்றுரைப்போம்

எதிரி என்ற வார்த்தை எதற்கு?
தூரத்து நண்பன் சொல்லித் திளைப்போம்

சதிபதி இருவர் சண்டைகள் இட்டால்
முரட்டு அன்பென்று மொழிந்து பார்ப்போம்

இலைகள் கழிந்த கிளைகள் கண்டால்
அடுத்த வசந்த ஆரம்பம் என்போம்

நொந்த தேகம் நோயில் விழுந்தால்
உடம்பே கொள்ளும் ஓய்வென்றுரைப்போம்

வெள்ளைச் சட்டையில் மைத்துளிபட்டால்
மையைச் சுற்றிலும் வெண்மையென்போம்

நிலவைத் தொலைத்த வானம் என்பதை
விண்மீன் முளைத்த விண்வெளி என்போம்

எதிர்மறை வார்த்தைகள்
உதிர்ந்து போகட்டும்

உடன்பாட்டு மொழிகள்
உயிர் கொண்டெழட்டும்

பழைய வார்த்தைகள் பறித்துப் பறித்துப்
புதிய நிலத்தில் பதியன்போடுவோம்

புளித்த வார்த்தைகள் மாறும்போது
சலித்த வாழ்க்கையும்
சட்டென்று மாறும்

- வைரமுத்து

Add a comment

ஆசை அடக்கி...

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

அலைபாயும் மனக்குதிரையை
அடக்காமல் அதன்மேல் ஏறி
அலைந்து திரிந்து கண்ணில்பட்டதெல்லாம் நுகர்ந்து
அதீத இன்பம் கண்டு

ஆயுள் முழுதும் சுதந்திரமாய்
ஆனந்த உலா வர
ஆவல் கொண்டு நிதம்
ஆர்பரிக்கும் ஆசைதனை தட்டிவிட்டு

இன்னல் எதிர் நோக்காது
இன்பம் துய்ப்பதை நோக்காக்கி வன்ம
இருள்தனை பெருக்கி
இயன்றவரை ஆசை தீர்க்க காம

ஈர்ப்பாகி மனிதம் மறந்த
ஈனத்தனம் புரிந்திட இருபாலுக்கும்
ஈங்கில்லை வேலையென புவி
ஈர்ப்பு விசையில் பாதாளத்தில் வீழ்ந்து

உறங்கிட நாள் குறிக்கும்
உன்னத கால(ன்) தேவன்
உடலோடு மனிதம் செத்த ஈனனாய்
உயிரை பறித்து உள்வாங்கு தலோடு

ஊழ்வினை பயனாய்
ஊறும் ஏழ்பிறவிக்கும் தலைமுறைக்கும்
ஊக்கமிலா மானிடனாய் உன்னத சந்ததியும்
ஊதாரியாய் இகழும் இழி பிறவி சாபம்
ஊட்டிடுவான்...மனசாட்சி நீதி தேவன்

எண்ணம் உணர்ந்து அடக்கத்தில்
எளிமை அணிந்து அதீத அறிவில்
எட்டு திக்கும் விரிந்து பறந்தாலும்
எட்டித் தாவும் ஆசைக்குதிரையை அடக்கி

ஏற்றமிகு ஒழுக்கக்குதிரைமேல் பயணிக்க
ஏற்றுக்கொள்ளும் இருபால் மனிதர்
ஐயமின்றி ஈட்டுவர் வெற்றிக்கனி...!

- நாகினி

 

Add a comment

எரியப் போகும் நீதி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

பேருந்துகளே பீதியடையாதீர்!
பயப்படாதீர்கள்!
இருபது ஆண்டுகளாயிற்று வழக்குத்தொடுத்து!
இன்னும் கொஞ்சமே இருக்கிறது
நீர்க்காமல்!
கோகிலவாணிகளே
கல்லூரிகளுக்குப் போங்கள்!
கோட்டை தெம்பாய்த்தானிருக்கிறது!
ஆடைகளுக்குள் ஆயுதங்கள் தரித்து
அழைய வேண்டிய அவசியமிருக்காது!
அமைதி காத்திடுங்கள்!
பஸ்களும் பயணிகளும் கொளுத்தப்படாமலிருக்க
வழக்குகள் மிக கவனமாக கையாள(ட)ப்பட்டு
தோற்கடிக்கப்படும்.
கவலை வேண்டாம். !
ஏதும் நிகழாது
நிகழ்த்தி விடவும் முடியாது!
ஏனெனில்
இது
காலாவதியானது
நீதி!
இம்முறை எரியப்போவதும்
நீதி !

சுதா ஆறுமுகம்

Add a comment

தாம்பத்யம்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

எனக்கும் அவளுக்குமான

கயிறு இழுக்கும் போட்டி தொடங்கியது

எங்களின் மண நாளிலிருந்து……

 

ஒருவரை நோக்கி ஒருவர்

இழுத்துக் கொண்டிருக்கிறோம் மூர்க்கமாக

முறுவல்களுடனும் முத்தங்களுடனும்…..

 

பொதுவான போட்டி விதிகள் எதற்குள்ளும்

பொருந்திப் போவதில்லை எங்களின் விளையாட்டு….

 

ஒருவரை நோக்கி ஒருவர்

நகர்ந்து விட நேர்கிறது அவ்வப்போது;

ஆயினும் சீக்கிரமே இயல்புக்குத் திரும்பி

இழுவையை தொடர்கிறோம்…..

கை தட்டி ஆரவாரித்தும்

கண்ணீரால் காயப்படுத்தியும் எங்களை

உசுப்பேற்றி விடுகின்றன உறவுகளும்….

 

மையக் கோடு மறைந்தாயிற்று

இழுக்கும் கயிறும் இற்றுக் கொண்டிருக்கிறது;

இருவரின் கைகளிலும் கொப்புளங்கள்

கால்களும் தளர்ந்து போயின…..

 

இருந்தும் இழுவையின் பிடி மட்டும்

இன்னும் இறுகிக் கொண்டு தானிருக்கிறது…..

 

வெற்றி தோல்விகளுக்கு அப்பாற்பட்டு

வெகுதூரம் வந்து விட்டோம்

இலக்குகள் எதுவுமின்றி

பழக்கத்தால் தொடர்கிறோம்;

வெறும் பாவணைகளிலும்…….!

 

– சோ. சுப்புராஜ்

Add a comment

காதலெனும் தீயினிலே...

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

இறந்த காலம் காதலுக்கு மட்டும் இல்லை - அது
இருந்தாலோ அதற்கு பேர் காதலில்லை

பிறந்த பயன் காதலிலே பூர்த்தியாகும் - காதல்
பிழம்பாலே நம் கண்கள் ஜோதியாகும்

ஒடியாத கிளையென்று நினைத்திருந்தேன் - கிளி
உட்கார்ந்து போன உடன் வளைந்து போனேன்

வடியாத நதியென்று நினைத்திருந்தேன் - நீ
வந்தஉடன் உன் மடியில் வடிந்து போனேன்!

உன்னை நான் பார்த்த உடன் நெஞ்சிக்குள்ளே - அடி
உட்சிறகு ஒரு லட்சம் முழைக்கக் கண்டேன்

விண்ணைப் போய் முட்டிவிடக் கூடாதென்றே - இன்று
விரிகின்ற சிறகுகளை சுருக்கிக் கொண்டேன்

எங்கே நான் பறந்தாலும் என்ன பெண்ணே - தினம்
இழைப்பாற உன் மடி தான் எனக்கு வேண்டும்

கங்கை நதி ஊரெல்லாம் திரிந்தாலென்ன - அடி
கடலில் தான் அது சென்று சேர வேண்டும்

சிரிப்பதற்கு மட்டுமிந்த உதடு போதும் - பார்வை
சிந்தி விழ மட்டுமந்த கண்கள் போதும்.

எரிப்பதற்கு மட்டுமந்த அழகு போதும் - ஆணை
இடுவதற்கு மட்டுமந்த விரல்கள் போதும்

கருப்புகளை மறந்து விட்டு எரிந்து நிற்கும் - ஒரு
கனகமணி விளக்கைப் போல் நமக்கும் தோழி

உறுப்புகளை மறந்துவிட்ட காதல் வேண்டும் - அது
உண்மையிலே சாத்தியமா முயன்று பார்ப்போம்.

- கண்ணன்

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி