கவிதை
கவிதைகள்
நாட்காட்டி
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: திங்கட்கிழமை, 23 பிப்ரவரி 2015 15:32
- எழுத்தாளர்: நளாயினி தாமரைச்செல்வன்
- படிப்புகள்: 1226
திகதிகளின் ஒற்றைகளை மட்டுமே
கிழித்துப்போடும் எமக்கு
கடந்த பொழுதுகளின்
நிகழ்வுகளின் நினைவுகளை
மறந்துவிடத் தெரிவதில்லை.
நாட்கள் ஏனோ
அத்தனை
வேகமாகத்தான் போகிறது.
நிகழ்வுகளின்
நினைவுகள் மட்டும்
ஏனோ முடிவதில்லைத்தான்.
அழுகிறோம் .
சிரிக்கிறோம்.
அனலாகிறோம்.
ஆனாலும்
புதிதாய் வரும்
ஆண்டின் நாட்காட்டியை
ஏற்கத் துடிக்கும்
சுவரில் அறைந்த
ஆணிபோல் தான்
நாமும்.
- நளாயினி தாமரைச்செல்வன்
Add a commentதன் பிணத்தைத் தான் தொட்டுப் பார்க்கையில்…
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: வியாழக்கிழமை, 22 ஜனவரி 2015 08:41
- எழுத்தாளர்: ஈரோடு தமிழன்பன்
- படிப்புகள்: 1766
உச்சியில்
சமாதானக் கொடியை
உயர்த்தியாயிற்று
வரிவரியாய் ஒப்பந்தம் முகத்தில்
வரைந்தாயிற்று
சுவாசப் பையை
ஒப்படைத்துவிட்டு மூச்சு
வெளியேற
நாள் குறித்தாயிற்று.
மரணத்திடம்
சரணடையும் முன் ஒரு விருப்பம்
அவனுக்கு…
வளர்ச்சியை முன்னேற்றத்தை
வளைத்துப்போட்ட
அவனுக்குத்
தான்
விலக்கிவைத்த வாழ்க்கையிடம்
ஒரு தடவை
பேசிவிட்டு வரவேண்டும்…
உலராத
இரத்தத்துடன் கிடக்கும்
நேற்றுகளை
விலக்கிக்கொண்டே ஓடினான்...
- ஈரோடு தமிழன்பன்
Add a commentமுடிந்துபோன மாலைப்பொழுது
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 18 பிப்ரவரி 2015 14:46
- எழுத்தாளர்: பா.அகிலன்
- படிப்புகள்: 1369
பார்க்கிறோம்,
விழி கொள்ளாத் துயரம்
உதடுகள் துடிக்கின்றன
தடுமாறி உயிராகும் வார்த்தைகளும்
காற்றள்ளப் போய்த் தொலைகிறது...
நேற்று
சணற்காட்டில் மஞ்சள் மௌனம்,
இன்று
கண்களில் நீர்
போகிறாய்
மேற்கில் வீழ்ந்தணைகிறது சூரியன்.
- பா.அகிலன்
பொங்கலோ பொங்கல்!
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 14 ஜனவரி 2015 22:42
- எழுத்தாளர்: கவிஞர் அ. கௌதமன்
- படிப்புகள்: 1325
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்
தங்குக இன்பம் தமிழன் வாழ்வினில்
மங்குக தீமைகள் பொங்குக வளமைகள்
விஞ்சுக நலங்கள் மிஞ்சுக நன்மைகள்
நீங்குக கயமை நிலவுக வாய்மை
நல்குக வெற்றி நலிக தீதென்றும்
நிறைக நிம்மதி நீடுக ஆயுள்
நிலமே செழித்து நீர்வளம் பெருகுக
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ
பொங்குக பொங்கல் பொங்குக மகிழ்வென்றும்!
- கவிஞர் அ. கௌதமன்
Add a commentசிறகு கொள்
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 11 பிப்ரவரி 2015 12:21
- எழுத்தாளர்: ரவி
- படிப்புகள்: 1144
வார்த்தைகளுள் தமது
கவலைகளை புகுத்தி
தனக்களவாய்
முடிந்தால் கனதியாய்
ஊதிப்பெருப்பிக்கும் கலையறியா
குழந்தைகளின்
போர்ச்சோகம் கொடியது.
பனிக்காலம்
கொண்டுபோயிற்று அதன் பசுமையை
மழலை இழந்த சோகத்தில்
வாடும் ஓர் தாய்போல்
இந்த மரமும் ஏதும் இழந்ததுவோ
அன்றி
சூரிய முகட்டுக்கு தன் பசுமையை
அனுப்பிவைத்து - அதன்
வரவுக்காய் காத்திருக்கிறதுவோ
அறியேன் நான்.
பனிப்போரில் இழந்த தன்
பசுமையை எண்ணி
சோகம் கொள்கிறது இந்த மரம்
என்று நான்
எடுத்துக் கொள்கிறேன்.
சிறகொடுக்கி தனியாக
கொடுங்குகிறது ஓர் குருவி
போர்பட்ட குழந்தையொன்றின்
புரியாத சோகங்களும் ஏக்கங்களும்
இந்தக் குருவியின் இறக்கையுள்
புகுந்ததோ என்னவோ
அது கொப்புதறி பறப்பதாயில்லை.
சூரிய ஒளி
பனிப் புகாரினூடு வடிந்திருக்கும் இந்த
மங்கிய பொழுதில்
ஈரம்பட்டு காட்சிகள் கலைகிறது -
பார்வைகளை முறித்தபடி.
அவரவர் பார்வையில்
சமாதானக் கனவு
விதம்கொள்கின்றது.
குழந்தையின் உலகையே
அங்கீகரிக்காத அதிகாரப் பிறவி நீ
அதன் உளம்புகுந்து சோகம் அறிய
முடியுமா உன்னால்
என்கிறது வேகமுறும் காற்று
பனித்திரளை துகளாக்கி
வீசியடிக்கிறது
குளிர்கொண்டு அறைகிறது என்
முகம் சிவக்க.
போரின் இறப்பை
கொத்திவரும் ஓர் செய்திக்காய்
இந்தக் குருவியும் காத்திருக்கிறது!
- ரவி
Add a commentஆட்டுக்குட்டிகளின் தேவதை
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 07:19
- எழுத்தாளர்: எம்.ரிஷான் ஷெரீப்
- படிப்புகள்: 1042
ஆட்டுக்குட்டியைத் தூக்கித் திரிந்த இடைச்சியின்
இடர்காலப் பாடல் எங்கும் விரிகிறது
கோடை காலங்களில் எஞ்சியிருக்கும்
அம் மலைப் பிரதேசப் பூக்களில் தேனுறிஞ்சும்
கூர் சொண்டுக் குருவி
நிலாக் கிரணங்கள் வீழும்
அவளுக்குப் பிடித்தமான வெளிகளுக்கெல்லாம்
அப் பாடலைக் காவுகின்றது
பள்ளத்தாக்கில் ஆடுகளைத் துரத்தியபடி
தண்ணீர் தேடிச் சென்றவேளை
சிதைந்தவோர் குளக்கரையைக் கண்டுகொண்டாள்
வரண்ட பாசிகளோடு வெடித்திருந்த தரையில்
களைத்துப் போய் பெருவலி தந்த
கால்களை மடித்து ஓய்வெடுத்தவளோடு
சேர்ந்து கொண்டதொரு சிவப்பு வால் தும்பி
வலிய விருட்சங்கள் உதிர்ந்துவிட்டிருந்தன
விதவிதமாய்க் குரலிட்ட பட்சிகளெல்லாம்
வேறு தேசங்களுக்குப் பறந்துவிட்டிருந்தன
புழுதி மண்டிய மேய்ச்சல் நிலத்தில்
மந்தைகளின் தேவதை
முடங்கிப் போயிருக்கிறாள்
உஷ்ணப் பிரம்பினைக் காட்டி
அவளை மிரட்டி வைத்திருக்கும் வெயில்
கடல் தாண்டித் தனது யாத்திரையைத் தொடரும்வரை
பயணப் பாதைகளிலெல்லாம்
ஆட்டுக்குட்டிகளே நிறைந்திருக்கும்
இடைச்சியின் கனவில் எப்போதும் வரும்
பசிய மரங்கள் அடர்ந்திருக்கும் வனமும்
மீன்கள் துள்ளித் தெளிந்த நீரோடும் நதியும்
புற்களும் புதர்களுமாய் அடர்ந்த சமவெளியும்
அவளுக்கு எப்போதும்
ஆதிக் காலங்களை நினைவுறுத்தும்
வாடிச் சோர்வுற்ற விழிகளினூடு
தொலைவில் அவள் கண்டாள்
யானையாய்க் கறுத்த மேகங்கள்
வானெங்கும் நகர்வதை
இனி அவள் எழுவாள்
எல்லா இடர்களைத் தாண்டியும்
துயருற்ற அவளது பாடலோடு
விழித்திருக்கும் இசை
ஒரு புன்னகையெனத் ததும்பித் ததும்பி மேலெழும்
ஆக்ரோஷமாக... ஆரவாரமாக...
ஆட்டுக்குட்டியைப் போலவே துள்ளித் துள்ளி...
- எம்.ரிஷான் ஷெரீப்
Add a comment