கவிதை
இயைந்த நிலை
- விவரங்கள்
- பிரிவு: கவிதைகள்
- வெளியிடப்பட்டது: புதன்கிழமை, 01 பிப்ரவரி 2017 12:09
- எழுத்தாளர்: மௌனன்
- படிப்புகள்: 4687
அடுத்து வரப்போகும்
குளிர்காலத்துக்கான எரிபொருளாக
இப்போது உதிரும் இலைகளையே சேமிக்கிறேன்.
ஒடிந்து விழுந்த சின்னஞ்சிறு
விறகுகள் தவிர்த்து
மரங்களின் கிளைகளில்
கத்தி வைத்துவிடாதவனாக என்னை
இந்த இயற்கையின் முன்
விசுவாசத்தோடு இருக்கவிடுகிற
சாத்தியங்களை யாசிக்கிறேன்.
நிறைய மலர்களோடு வரவிருக்கும்
வசந்த காலத்திற்கு
கிளைகளுடன் கூடிய மரங்களை
குளிர் பொறுத்தேனும்
விட்டு வைத்திருக்க விரும்புகிறேன்.
இயற்கையின் முன்
மண்டியிடுபவனாகவே இருந்துவிடுகிறேன்.
என் தலைமீது
இயற்கையின் பாதமிருக்கட்டும்.
- மௌனன்