கவிதை

சார்பியல்...

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
View Comments

வாழ்க்கையின் சாப்பாட்டு அறை
மேஜையில் அமர்ந்திருக்கிறோம்.

என் தட்டில்
ஒன்றுமேயில்லை.

என் மகளின் தட்டில்
நேரம்
என்ற மிகப் பெரிய ரொட்டித் துண்டு
இருக்கிறது.

அதை
'கறக் முறக் கறக் முறக்'
என சத்தமாக வாயில் நொறுக்கி,
அவள்
நிதானமாக
கடித்து,
கடித்து,
ரசித்துத்
தின்கிறாள்.

அவளுடைய வாயோரம்
ஒட்டியிருக்கும்
சிறு சிறு
துகள்களை மட்டும்
பொறுக்கியெடுத்து
என் வாயில் போட்டுக் கொள்கிறேன்.

துகள்கள் போதவில்லை, இன்னும் பசிக்கிறது.
மனமோ, அவள் சாப்பிடுவதைப் பார்த்தே
நிறைந்திருக்கிறது,
இதுவே போதுமெனத் தோன்றுகிறது.

 

- பார்த்திபன்