கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை கவிதைகள்

புள்ளிகள்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

கண்களின் வீச்சில்
ஒரு புள்ளியில்
சந்திக்கும் வேளை
காதல் அரும்புகிறது.

அது கணங்கள் தோறும்
நிகழ்கின்றது.
புள்ளிகள் மாறுகையில்
காதலும் மாறகிறது.
காதலோ
அது மறைவதில்லை.
எனது கண்கள்
வீச்சைப் பாய்ச்குகின்றன,
புள்ளிகள் சந்திக்காத
நெடுந்தூரப் பயணம்.

முகத்தைச் சுருக்கி
நிராகரித்தும்,
கண்களால் எரித்துக்
காயமாக்கியும்,
நாவினால் சுட்டு
அவமானமாக்கியும்,
ஒரு புழுவென என்னை
மதியாமலும்.....
புள்ளிகள் சென்றன.
பயணத்தின் தூரம்
அதிகம் போலும்.
புள்ளிகள் சுருங்கி
சூனியமாகும்.
ஏகாந்தமெங்கும்
முகமறியாதவர்களுடன்
காதல் தொடர்கிறது...

- கி.பி. அரவிந்தன்

Add a comment

மழை

பயனாளர் மதிப்பீடு: 4 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

மழையே மழையே வா வா -- நல்ல
வானப்புனலே வா வா! --இவ்
வையத்தமுதே வாவா!

தழையா வாழ்வும் தழைக்கவும் -- மெய்
தாங்கா வெப்பம் நீங்கவும்
உழுவாரெல்லாம் மலைபோல் எருதை
ஓட்டிப் பொன்னேர் பூட்டவும் மழையே...

தகரப்பந்தல் தணதண வென்னத்
தாழும் குடிசை சளசள என்ன
நகரப்பெண்கள் செப்புக் குடங்கள்
நன்றெங் குங்கண கணகண வென்ன மழையே...

ஏரி குளங்கள் வழியும்படி, நா
டெங்கும் இன்பம் பொழியும்படி, பொடி
வாரித்தூவும் பூவும் காயும்
மரமும் தழையும் நனைந்திடும்படி மழையே...

இல்லாருக்கும், செல்வர்கள் தாமே
என்பாருக்கும், தீயவர் மற்றும்
நல்லாருக்கும் முகிலே சமமாய்
நல்கும் செல்வம் நீயேயன்றோ? மழையே...

- புரட்சி கவிஞர் பாரதிதாசன்

 

 

Add a comment

வசந்தவல்லி வருதல்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

நன்னகர்ப் பெருமான் முன்போய் நாணமும் கலையுந்தோற்ற
கன்னியர் சநுப்போற்காட்டிக் காமவேள் கலகமூட்டிப்
பொன்னணித் திலதந் தீட்டிப் பூமலர் மாலைசூட்டி
வன்னமோ கினியைக்காட்டி வசந்தமோ கினிவந்தாளே.

வங்காரப் பூஷணம் பூட்டித் திலதந்தீட்டி
மாரனைக்கண் ணாலே மருட்டிச்
சிங்கார மோகனப் பெண்ணாள் வசந்தவல்லி
தெய்வரம்பை போலவே வந்தாள்

கண்ணுக்குக் கண்ணிணை சொல்லத் திரிகூடக்
கண்ணுதலைப் பார்வையால் வெல்லப்
பெண்ணுக்குப் பெண்ம யங்கவே வசந்தவல்லி
பேடையன்னம் போலவே வந்தாள்.

கையாரச் சூடகமிட்டு மின்னாரை வெல்லக்
கண்ணிலொரு நாடகம் இட்டு
ஒய்யார மாக நடந்து வசந்தவல்லி
ஓவியம் போலவே வந்தாள்

சல்லாப மாது லீலர் குற்றால நாதர்
சங்கநெடு வீதிதனிலே
உல்லாச மாது ரதிபோல் வசந்தவல்லி
உருவசியும் நாணவே வந்தாள். 

 -இரசிகமணி சிதம்பரநாத முதலியார்

Add a comment

காற்று வெளியிடைக் கண்ணம்மா

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
தூற்றினை யொத்த இதழ்களும் - நில
வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
விண்ணவ னாகப் புரியுமே!

நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
போயின, போயின துன்பங்கள் நினைப்
பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
தீயினி லேவளர் சோதியே - என்றன்
சிந்தனையே, என்றன் சித்தமே!

- சி. சுப்ரமணிய பாரதியார்
Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி