கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதைகள்

காதல் அல்ல

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத புன்னகை
நெருங்க மறுக்கும் தயக்கம்
அருகிலிருந்தும் தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல் வாரம்...

- வீரமுத்ரன்

Add a comment

இன்றா சுதந்திரம்?

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்

இணையற்ற
இந்தியாவிற்கு
இன்றா
சுதந்திரம்???

ஊரை அடித்து
உலையில் போடும்
ஊழல் பெருச்சாளிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

பூமத்திய கோட்டையே
புவியிலிருந்து விரட்டிய
வறுமைக் கோட்டிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

சொர்க்க பூமியதை
இரத்த பூமியாக்கிய
ஈனப் பிறவிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

சாதியின் பொயரால்
சண்டையிடும்
சண்டாளர்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

பெண்மையைப்
பேணிடாத
பேடிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

கையூட்டினால்
கொழுத்திட்ட
களவாணிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

மதத்தின் பெயரால்
மனிதத்தை கொல்லும்
மனித மிருகங்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

கல்வியினை
காசுக்கு விற்றிடும்
கயவன்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

காவல்துறையை
களங்கப்படுத்தும்
கருங்காலிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

மருத்துவத்துறையின்
மாண்பினை மறந்திட்ட
மானமிழந்தவரிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

ஓட்டுக்காக மட்டும்
ஒன்றுகூடிடும் பச்சை
ஓணான்களிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

தேர்தலன்று மட்டும்
தேடி வந்திடும்
தேச துரோகிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

தாய்மொழியினை
தலைகுனிவாய் நினைக்கும்
தருதலைகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

ஆன்மீகமதன் பெயரால்
அநியாயம் செய்திடும்
அதர்மிகளிடம்
இருந்து
இப்போதைக்கு கிடைக்குமா
இந்தியாவிற்கு சுதந்திரம்??

இப்போது
கூறுங்கள்
இன்றா சுதந்திரம்
இந்திய தேசத்திற்கு!!

 

- இட்ரிஸ் பாண்டி

Add a comment

புதுக்கவிதை

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

உன்னிடம்
இடம்பெயர்த்துவிட்ட பிறகு
மௌனமாய்
நீ என்னைக் கடந்து செல்லும்
கன நேரத்திற்காய்
கடிகாரத்துடன் என்னைப்
பிணைத்துக் கொள்கிறேன்.


சுண்டுவிரல் பிடித்து
நடைபழகும் குழந்தையின்
வினோத கேள்வியொன்றிற்கு
விடைதேடும் தகப்பனைப்போல
உன் உதட்டுச் சுழிப்பிற்கு
அர்த்தம் தேடுகிறேன்.

தூரம் சென்று
திரும்பிப் பார்த்த - உன்
தோழிகள்
ஏதோ சொல்லி - நீ
வெட்கப்பட்டுச் சிவந்ததை
இயல்பாக நடந்ததாக
ஏற்க மனமில்லை


அந்தக் கடைசி நாளின்
நண்பர்கள் கூட்டத்தில்
என்பெயர் உச்சரிக்க நேர்கையில்
உன் குரல் உடைந்து
கண்மை கலைந்ததற்கு
நீ
என்ன சமாதானம்
சொன்ன போதும்
ஏற்கத் தயாராயில்லை
நான்.

- பா. சக்தி கல்பனா

Add a comment

இளமை

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

இளமை

ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும்

உடனே புறப்படவேண்டுமென்றும்

கேட்டுக்கொண்டது இளமை

 

எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை

மென்மையான குரலில்

ஒரு தாயைப்போல அறிவித்தது

 

தடுக்கமுடியாத தருணமென்பதால்

ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்

நாள் நேரம் இடம்

எல்லாவற்றையும் பேசிமுடித்தோம்

முழுச் சம்மதத்தோடு

தலையசைத்துச் சிரித்தது இளமை

 

நாற்பதைக் கடந்து நீளும்

அக்கணத்தில் நின்றபடி

இளமையின் நினைவுகளை

அசைபோடத் தொடங்கியது மனம்

 

இளமை

மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம்

நீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு

அதன் கொத்துகளிலிருந்து

ஒவ்வொரு மலராக உதிர்ந்து விழுகின்றன

 

வீடெங்கும் நிறைந்திருக்கின்றன

கடந்துபோன இளமையின்

காலடிச் சுவடுகள்

நாவில் விழுந்த தேந்துளியென

ஊறிப் பெருகும் சுவைபோன்றது

மறைந்த இளமையின் கனவு

 

கரைந்துபோன இளமைதான்

காதலாக கனிந்து நிற்கிறது

இளமையின் மதுவை அருந்தியவையே

இக்கவிதைகள்

 

இன்றும் பொசுங்கிவிடாமல்

நான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்

இளமையால் அன்பளிப்பாகத் தரப்பட்டவை

 

குறித்தநாள் முன்னிரவில்

எங்கள் தோட்டத்தில்

அந்த விருந்தை நிகழ்த்தினோம்

எதிரும்புதிருமாக அமர்ந்து

பழங்கதைகள் ஆயிரம் பேசினோம்

காரணமின்றியே கைகுலுக்கி

கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டோம்

ஒரு மிடறு  மதுவை அருந்தியதுமே

ஆனந்தம் தலைக்கேற

இனிய பாடலொன்றைப் பாடியது அது

உற்சாகத்தில் நானும் பாடினேன்

 

இவ்வளவு காலமும்

சிரிக்கச்சிரிக்க வாழ அனுமதித்த இளமைக்கு

நன்றியைத் தெரிவித்தபடி

போய் வருக என்று

ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன்

இறுதியாக ஆரத்தழுவிய இளமை

என் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது

என்னைவிட்டு விலகுவதில்

அதற்கும் துக்கம் அதிகம்

தெருமுனை திரும்பும்வரை

திரும்பத்திரும்பப் பார்த்துச் சென்றது

 

குழந்தைமை உதிர்ந்ததைப்போல

பால்யம் விலகியதைப்போல

இளமையும் நெகிழ்ந்து உதிர்ந்தது

ஒரு சகஜமான செயலைப்போல

 

நான் இளமையை இழந்தால் என்ன

எனக்குள் இன்னும் இனிக்கிறது

இளமையின் முத்தம்

 

- பாவண்ணன்

Add a comment

கோடையின் இறுதி நாட்கள்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

கோடையின் இறுதி நாட்கள்,

ஒவ்வொன்றாய் அணையும் விளக்குகளைப் போல்

பிரகாசித்து மங்குகின்றன.

ஒரு விளக்கை விட்டு

இன்னொரு விளக்கிற்குப் பறக்கும்

ஈசலாய் நான்.

- பார்த்திபன்

Add a comment

உரிமை மனு

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

தவண்டு தவண்டு முடியாமல் -
மீண்டும்
தொட்டில் தேடும்
மழலையின் அவஸ்த்தை
அடைந்து கொள்ள முடியாமல்
அடங்கிப் போகும்
என் கனவுகளுக்குள்


குயில் கூடு கட்டுமென்று
காத்திருப்பார் எவரும்
கூடு கட்டும் காகத்தை
கண்டுகொள்ள விரும்பவில்லை


தாகமுள்ள ஜீவனுக்கு
தண்ணீர் தர நாட்டமில்லை
தாகமூட்டி சிலருக்கு ஏனோ
பன்னீர் பிச்சை போடுகிறார்?


போட்டிகள் இல்லாமலே
தோற்றுப் போகிறேன்
போர்வைகள் இல்லாமலே
போர்த்தப் படுகிறேன்


உரிமை கேட்டு என் நாவும்
உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...

'வாடகை வெளிச்சத்தில்
வெள்ளி நிலா கைக்கொட்டும்..
நகைத்துத் தூற்றும்
மெய்யழகன் கதிரவனை...

கதிரவனும் காத்திருப்பன்
என்றும் போல
விடியலோடு விடிவு வரும்
நம்பிக்கையில் '

அஃறிணை  உதாரணங்களோடு
அன்பான அடக்கு முறைகள் -
உதட்டோடு என் நாவை
கட்டிப் போடும்

- ஜாவிட் ரயிஸ்

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி