கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை கவிதைகள்

வட்டத்துக்குள் வாழ்க்கை

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

வாழ்க்கை சலிப்பூட்டுகிறது
எத்தனை பகல்கள்
எத்தனை இரவுகள்
எத்தனை மனிதர்கள்
ஏதோ இருப்பது போலும்
ஒன்றுமே இல்லாதது போலும்
தோன்றுகிறது
தூரத்தில் கயிறுதானேயென்று
அலட்சியமாக வந்தால்
கிட்டத்தில் பாம்பாகிறது
துரோகக் கழுகு
என்னை வட்டமிடுகிறது
எங்கு போயினும்
மரண சர்ப்பம்
என்னைத் துரத்துகிறது
வாழ்க்கை வட்டம்
நிறைவுறும் போது
எனக்காக எதுவும்
மிச்சமிருக்காது
மாம்சம் சாம்பலாகும்
நினைவுகள் சூன்யமாகும்
இன்னார் இருந்தாரென்பதை
இவ்வுலகம்
சீக்கிரத்தில் மறந்து போகும்.

- ப. மதியழகன்

Add a comment

மாயத்தோற்றம்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

தாள்களுக்கிடையே வைத்து மூடிய

மைதோய்ந்த நூல்

விதம்விதமாக இழுபடும்போது

உருவாகின்றன எண்ணற்ற சித்திரங்கள்

ஒரு தாளில் தென்படுகிறது

ஊமத்தம்பூ

இன்னொன்றில் சுடர்விடுகிறது

குத்துவிளக்கு

அடுத்த பக்கத்தில் ஆர்ப்பரிக்கிறது

அலை உயர்த்திய கடல்

அதற்கடுத்து படபடக்கிறது

முகமற்ற பெண்ணின் விரிகுழல்

பிறிதொரு பக்கத்தில்

உடலைத் தளர்த்தி

தலையை உயர்த்தி

செங்குத்தாய் விரிந்த

பாம்பின் படம்

- பாவண்ணன்

Add a comment

வருவதும் போவதும்

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

பேருந்து கிளம்பிச் சென்றதும்

கரும்புகையில் நடுங்குகிறது காற்று

வழியும் வேர்வையை

துப்பட்டாவால் துடைத்தபடி

புத்தகம் சுமந்த இளம்பெண்கள்

அணிஅணியாக வந்து நிற்கிறார்கள்

மனபாரத்துடன்

தவித்து நிற்கிறான் சில்லறை வியாபாரி

ஏற்றப்படுவதற்காகக் காத்திருக்கின்றன

விற்காத போர்வைக்கட்டுகள்

மின்னல் வேகத்தில் தென்பட்டு

நிற்பதைப்போல போக்குக்காட்டி

தாண்டிப் பறக்கிறது நிறுத்தங்களற்ற வாகனம்

கடற்கரை கடைத்தெரு தனிப்பாடல் பள்ளி

நண்பர்கள் வீடு திரைப்படம்

மதுச்சாலை இசைக்கச்சேரி செல்ல

வந்து நிற்கிறார்கள் தனித்தனியாக

கணிக்கமுடியாத மழையை நினைத்து

தற்காப்புக்கு சிலரிடம் உள்ளன குடைகள்

தொலைவில் தென்படும்

பேருந்துத் தடத்தை உய்த்தறிந்து

பரபரப்புக் கொள்கிறார்கள் இடம்பிடிக்க

நேரத்துக்குள் செல்லும் பதற்றத்தால்

நிற்கும் மனநிலையுடன் ஏறுகிறார்கள் பலர்

வாய்ப்பின்மைக்கு வருத்தம் சுமந்து

- பாவண்ணன்

Add a comment

எது கவிதை ?

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

கவிதை !
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டதை நீயும் நானும்
புரிந்துகொள்வது ?
எது கவிதை ?
நீயும் நானும் பேசிக்கொள்வது ?
பேசிக் கொண்டது உனக்கு மட்டுமே
புரிந்தது ?
எது கவிதை ?
நீ எழுதும் ஒவ்வொரு வார்த்தையும்
என்னை உறுத்திக் கொண்டால்
அது கவிதை ?
எது கவிதை ?
சொல்லத் தெரியவில்லை
சொல்ல அனுபவமில்லை
இதுதான் கவிதையென்று தெரியும் நேரம்
நீயும் நானும் இன்றைய இன்பமான
பொழுதுகளை இரைமீட்போம்

- நிர்வாணி

Add a comment

போய் வா தோழி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

என்னுள் நீ
உடைந்து நொறுங்கிய தருணத்தில்
உனக்கான என் உணர்வுகள்
கற்பிழந்துவிட்டிருந்தது
என் தன்மானத்தில் தலையிலேறி
குத்தி கிழித்து குதறி
கோரதாண்டவமாடியிருந்தாய்
உனக்காய் செலவழிந்த நொடிகள்
கழிவுப் பொருள்களாய்
காற்றில் இரையப்பட்டிருந்தது
நீ விட்டுப்போன இதயத்தின்
வெறுமை பக்கங்களில்
வெறுப்பு வந்தடைத்திருக்க
இறந்துபோயிருந்தேன்!

- பாஷா

Add a comment

தினந்தோறும் தீபாவளி

பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்

வறுமை துயர் நீங்க வேண்டும்
வாசல்தோறும் வளங்கள்
வழிய வேண்டும் – என்ற
மீட்பின் குரலோடு
அரியணையில் அமர்ந்தோர்
வாக்குறுதிகள் காற்றில் கலக்காது
வாணவேடிக்கையாய் – பல
வண்ணங்களில் மின்ன வேண்டும்!

‘ஆட்டம் பாமாய்’ வெடித்து
நாள்தோறும் பயமுறுத்தும்
விலைவாசி ஏற்ற இறக்கங்கள்
வாழும் வேட்கையை-
தகர்க்காது காக்க வேண்டும்!

நிம்மதி – சரவெடியாய்
படபடத்துச் சரியாமல்
சிந்தை பூக்கும் ஆசைகள்
அணை தாண்டி மகிழ வேண்டும்!

மதுவில் மயங்கி – உழைத்தும்
வீடு சேரா ஊதியத்தால் – பசி
பட்டினிச் சாவெனும் அவலங்கள்
சங்குச்சக்கரமாய் – நித்தமும்
வாழ்வை சுற்றாத நிலை வேண்டும்!

சின்னச்சின்ன
ஆசைகளின் வண்ணக்
கனவுகளில் மத்தாப்பூ சிதறல்கள்
பூத்துச் சிரிக்க வேண்டும்!

பொய், புரட்டு, சூது, லஞ்சமென
புதுப்புது முகமூடிகளுடன்
திரை மறைவு பொம்மலாட்டங்கள்
எரி குச்சியாய் கரைய
புது உதயம், புது வாழ்வென
புத்துணர்ச்சி பொங்க வேண்டும்!

எண்ணங்கள் – மறந்து
ஆசைகள் – துறந்து
வாழும் வழிகள் – இழந்து
வாசல் விட்டு வீதியில் தவித்தலின்றி
கிழக்கு வெளுக்கும் நாௌல்லாம்
எம்மக்களுக்கு – தினந்தோறும்
தீபாவளியாக வேண்டும்!

- செல்லம் ரகு, திருப்பூர்.

Add a comment

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி