கவிதை

என் முனியம்மா...

பயனாளர் மதிப்பீடு: 1 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 
View Commentsபாரதிக்கு
கண்ணன் என் சேவகன் மாதிரி
எனக்கு எங்கள் முனியம்மா.

காய்கறி நறுக்குவது முதல்
துணிமடிப்பது வரை
எல்லாம் அவள் செய்வதாகத்தான் ஒப்பந்தம்
ஆனால் ஒப்பந்தங்களை மீறுவதில்
நாங்கள் இருவருமே
இந்தியாவும் இலங்கையும் மாதிரி.

ஆனால் எங்கள் ஒப்பந்தங்களில்
எழுதப்படாத ஷரத்துகள்
எங்கள் இருவருக்குமே
ரொம்பவும் முக்கியமானவை
அதைத் தொடர்வதால்தான்
என்றும் தொடர்கிறது
எங்கள் இருவருக்குமான
கைகுலுக்கல்கள்.

எல்லார் வீட்டு செய்திகளையும்
அவள் சொல்லச்சொல்ல
நான் விருப்பத்துடன் கேட்பது போல
ம்ம் கொட்ட வேண்டும்.
பதிலுக்கு நான் சொல்லும்
இலக்கிய அரசியல் கதைகளை
அவளுக்குப் புரியாவிட்டாலும்
அவள் கேட்டாக வேண்டும்.

இப்போதெல்லாம் நம் தமிழர்
எழுச்சிக்கதைகளை
முத்துக்குமரன்களின்
உயிர்த்தியாகங்களை
ஈழத்தமிழருக்காய்
நடக்கும் கூட்டங்களை
பேரணிகளை
மனிதச்சங்கிலிகளை
நித்தமும் நித்தமும்
நம் தலைவர்கள் பேசிய
வீரவசனங்களை
சொல்லிச்சொல்லி
பூரித்துப்போனேன்.
தேர்தல் வந்தது
கூட்டணி பிறந்தது.

முனியம்மா கேட்கிறாள்
என்னமா இது..?
யாரு கூட யாரெல்லாம்?
ஈழத்தமிழர் போராட்டம்
அது இதுனு சொன்னீகளே
இவுக மாறிமாறி
அங்கேயும் இங்கேயுமா
நிக்கத பார்த்த..
ஏ தாயி...
அண்ணன் தம்பி செத்தாலும் பரவால்லேனு..
இந்த ஆட்டம் ஆடுதானுகளே..
இவனெல்லாம்
சோத்துலே உப்பு போட்டு தின்னான
இல்ல..

முனியம்மா அடுக்கிக்கொண்டே
இருக்கிறாள்
நான் மவுனமாய்...
வழக்கம் போல
ம்ம்ம் கொட்டிக்கொண்டு.

- புதிய மாதவி, மும்பை