கவிதை

பொருள்வயிற் பிரிதல்

பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 
View Comments

 

மூங்கில்களுக்கிடையே 
வெளிச்சப்புள்ளியென நீ கடந்து சென்றதைக் 
கண்களில் நிறைத்து, 
முகிழ்த்து இயம்புகிறது என் திசைவழி, 

வயல் வெளியின் பசுமையொத்து, 
நிர்பந்தித்தலுடன் கிடக்கிறது என் மௌனம்,, 

பிரிவின் ரேகை படிந்த வார்த்தைகளை, 
நம் சேய்களோடு முணுமுணுத்தபடி, 
கடந்து செல்கிறது களிப்பற்ற பொழுது,, 

நீயற்ற நம் நிலத்தினை, 
நீயற்ற நம் நதியினை, 
நீயற்ற் நம் இரவினை, 
அழித்தொழிக்காமல் பிணைத்திருக்கிறது, 
எமக்கு உணவாகும் உன் பிரயாசத்தின் குருதி,, 

நீ கடந்து சென்ற ஸ்தலமெங்கும், 
முளைத்தெழும்பிப் படர்கிறது 
உன் விளைவித்தல்,, 

ஒரு நீரோட்டத்தினைப்போல் 
நிகழ்ந்திருக்கும் உன் நகருதலில், 
கானல் வரிப்பாடலொன்றை இசைக்கும்,, 
தன் மீட்பின் அனுமானங்களுடன் 
இடும்பை விழையாப் பறவை

அ.ரோஸ்லின்