கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

கவிதை

 • காதல் அல்ல

  எதிர்பாராத பார்வை
  மறக்கமுடியாத புன்னகை
  நெருங்க மறுக்கும் தயக்கம்
  அருகிலிருந்தும் தனிமை
  காயப்பட்டும் இனிமை
  அட,
  இது காதலினால் அல்ல
  கல்லூரியில் முதல் வாரம்...

  - வீரமுத்ரன்

 • புதுக்கவிதை

  உன்னிடம்
  இடம்பெயர்த்துவிட்ட பிறகு
  மௌனமாய்
  நீ என்னைக் கடந்து செல்லும்
  கன நேரத்திற்காய்
  கடிகாரத்துடன் என்னைப்
  பிணைத்துக் கொள்கிறேன்.


  சுண்டுவிரல் பிடித்து
  நடைபழகும் குழந்தையின்
  வினோத கேள்வியொன்றிற்கு
  விடைதேடும் தகப்பனைப்போல
  உன் உதட்டுச் சுழிப்பிற்கு
  அர்த்தம் தேடுகிறேன்.

  தூரம் சென்று
  திரும்பிப் பார்த்த - உன்
  தோழிகள்
  ஏதோ சொல்லி - நீ
  வெட்கப்பட்டுச் சிவந்ததை
  இயல்பாக நடந்ததாக
  ஏற்க மனமில்லை


  அந்தக் கடைசி நாளின்
  நண்பர்கள் கூட்டத்தில்
  என்பெயர் உச்சரிக்க நேர்கையில்
  உன் குரல் உடைந்து
  கண்மை கலைந்ததற்கு
  நீ
  என்ன சமாதானம்
  சொன்ன போதும்
  ஏற்கத் தயாராயில்லை
  நான்.

  - பா. சக்தி கல்பனா

 • இலை

  நிறைந்த வாழ்வு என் வாழ்வு

  நான் குளித்த மிச்சத்தில்
  பூமி குளித்தது

  சூரியக்கீற்று
  என்னைத் தொட்ட பிறகுதான்
  மண்ணைத் தொட்டது

  பகலில் நான் விட்ட மூச்சில்
  பாழ்பட்ட காற்று
  பத்தினியானது

  இந்த மரத்தில் நான்
  எடுத்தது பகுதி
  கொடுத்தது மிகுதி

  என் வாழ்விலும்
  சாயம் போகாத சம்பவங்கள்
  இரண்டுண்டு

  அடையாளம் தெரியாத புயலொன்று
  தளிர்களையும் தலைவாங்கிப் போனதே
  அந்த ராட்சச ராத்திரியும் -
  பூவில் வண்டு
  கலந்த காட்சி கண்டு
  பக்கத்து இலை கொண்டு
  முகம் மூடிக்கொண்டேனே
  அந்த மன்மதப் பகலும்.

  ஒருநாள்
  ஒண்டவந்த ஒரு பறவை
  கிண்டியது என்னை

  "மலராய் ஜனிக்காமல்
  கனியாய்ப் பிறக்காமல்
  இவ்வடிவு கொண்டதெண்ணி
  என்றேனும் அழுதாயோ
  ஏழை இலையே!"

  காற்றின் துணையோடு
  கலகலவென்று சிரித்தேன்

  "நல்லவேளை
  நான் மலரில்லை

  தேனீக்கள் என்கற்பைத்
  திருடுகின்ற தொல்லையில்லை

  நல்ல வேளை
  நான் கனியில்லை

  கிளிக்கூட்டம் என் தேகம்
  கிழிக்கின்ற துன்பமில்லை

  இயல்பே இன்பம்
  ஏக்கம் நரகம்"

  அதோ அதோ
  வாயு வடிவில்
  வருகுதென் மரணம்

  இதோ இதோ
  பூமியை நோக்கி
  விழுகுதென் சடலம்

  வழிவிடு வழிவிடு
  வண்ணத்துப் பூச்சியே

  விலகிடு விலகிடு
  விட்டில் கூட்டமே

  நன்றி மரணமே
  நன்றி

  வாழ்வுதராத வரமொன்றை
  வழங்க வந்தாய் எனக்கு

  பிறந்த நாள் முதல்
  பிரிந்திருந்த தாய்மண்ணை
  முதன்முதல் முதன்முதல்
  முத்தமிடப் போகிறேன்

  வந்துவிட்டேன் தாயே
  வந்துவிட்டேன்

  தழுவிக்கொள் என்னைத்
  தழுவிக்கொள்

  ஆகா
  சுகம்
  அத்வைதம்

  வருந்தாதே விருட்சமே

  இது முடிவில்லை
  இன்னொரு தொடக்கம்

  வாழ்வு ஒரு சக்கரம்
  மரணம் அதன் ஆரம்
  சக்கரம் சுற்றும்

  கிளைக்கு மறுபடியும்
  வேறு வடிவில் உன்
  வேர்வழி வருவேன்

  எங்கே
  எனக்காக ஒருமுறை
  எல்லா இலைகளையும்
  கைதட்டச் சொல்

  -வைரமுத்து

 • கனவுக்குள் கனவு கண்டேன்

  கனவுக்குள் ஒரு கனவு
  கண்டேன் !
  காசினியில் பிறர் எல்லாம்
  தாக்கினும்
  தோற்காத ஓர் நகரைக்
  கண்டேன் !
  அந்த நகரமே
  என் நண்பர் வாழும்
  புதியதோர் நகரம் !
  எதுவும் மிஞ்ச வில்லை
  உறுதி யான
  அதன் கவர்ச்சித்
  தரத்துக்கு மேலாக !
  பிற நகரங் களுக்கோர்
  வழிகாட்டி அது !
  மனிதச் செயல்களின்
  ஒவ்வோர் கண நிகழ்ச்சியும்
  ஒருமணி நேரத்தில்
  தெரிந்து விடும்,
  கண்ணோக்கிலும்,
  வாக்கு மொழியிலும் !

  - வால்ட் விட்மன் (தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா)

 • ரயில் சினேகம்!

  உதடுகளில் சிவப்புச் சாயம்;
  இன்று பூத்த மல்லிகை மலர்கள் போல் கண்கள்;
  சுருண்டு விழும் தங்க நிறக் கூந்தல்;
  கால் மேல் கால் போட்டபடி,
  நீண்ட கால்கள்;
  மேல் காலில்
  பாதி கழற்றிய,ஊஞ்சலாடும் ஹை ஹீல்ஸ்.

  இரயில் பெட்டியில்
  சகபயணியிடம்
  உரக்கப் பேசிச்
  சிரித்துக் கொண்டே வந்த அவள்,
  ஏதோ நிருத்தத்தில்
  'டக்', 'டக்' என இறங்கிச் செல்ல,
  தொலைந்து போனப் பரிதாபமான ஆடுகள் போல்
  எங்கள் கண்களும்
  கீழே இறங்கி அவளையே பின்தொடர்கின்றன.

  -  பார்த்திபன்

 • தடங்கள்

  நகரின்

  தடங்கள் அனேகமாய்

  பராமரிப்பில் மேம்பாட்டில்

  ஒன்று அடைபட

  ஒன்று திறக்கும்

   

  காத்திருப்பின்

  கடுமைக்கு

  வழிமறிப்பே

  குப்பையின்

  எதிர்வினை

  சுதந்திர வேட்கை

  அடிக்கடி

  சாக்கடைக்குள்

  பீறிட்டெழும்

   

  மண் வாசனை

  நெல் மணம்

  மாங்குயிலின் கூவல்

  தும்பி தேன்சிட்டு

  என்னுடன் கோலத்தில்

  புள்ளிகளாய்

  இருந்த காலத்தின்

  தடம்

  மங்கலாய் மிளிர்ந்து

  மறையும்

   

  நகரம் நீங்கிச்

  செல்லக் காணிக்கை

  தந்தாலே

  நெடுஞ்சாலை

  அனுமதிக்கும்

   

  ஆளுயரச் சக்கரங்கள்

  விரையும் வாகன

  வீச்சிலும் தென்படும்

  கோடுகள் இல்லாப் புள்ளிகள்

  மட்டும்

  காய்ந்த மண் நெடுகத்

  தடமே இல்லை

   

  அரியதாய் எங்கோ

  ஈர மண்

  அதுவும் சுமக்கும்

  டிராக்டரின் தடம்

   

  - சத்யானந்தன்

 • யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது?

  படம் : தலைவா

   

  ஆ: யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது
  காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது

  பெ: யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
  இன்று பேசாமல் கண்கள் பேசுது

  ஆ: நகராமல் இந்த நொடி நீல
  எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே

  பெ: குளிராலும் கொஞ்சம் அணலாலும்
  பின்பு நெருக்கம் தான் கொல்லுதே

  ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
  வண்ணம் நூறானது வானிலே...
  (ஆ: யார் இந்த)

  தீர தீர ஆசையாவும் பேசலாம்
  மெல்ல தூரம் விலகி போகும் வரையில் தல்லி நிர்க்கலாம்

  பெ: என்னை நானும் உன்னை நீயும் தோர்க்கலாம்
  இங்கு துன்பம் கூட இன்பம் என்று கண்டு கொள்ளலாம்

  ஆ: என்னாகிறேன் இன்று யேதாகிறாய்

  பெ: எதிர் காற்றிலே சாயும் குடையாகிறேன்

  ஆ: எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
  அது பறந்தோடுது வானிலே...
  (பெ: யார் எந்தன்)

  ஆ: மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
  அது மலையாய் விட்டு ஓடி வந்து சேரும் கடலிலே

  பெ: வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
  அது தோன்றும் வரையில் புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே

  ஆ: கண்ஜாடையில் உன்னை அரிந்தேனடி

  பெ: என் பாதையில் இன்று உன் காலடி

  ஆ: நேற்று நான் பார்த்ததும் இன்று நீ பார்த்ததும்
  நெஞ்சம் எதிர் பார்த்ததும் ஏனடி
  (ஆ: யாரு இந்த)

  பெ: யாரு எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
  இன்று பேசாமல் கண்கள் பேசுது

  ஆ: நகராமல் இந்த நொடி நீல
  எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
  (பெ: குளிராலும்)

  ஆ: எந்தன் ஆறானது இன்று வேரானது
  வண்ணம் நூறானது வானிலே...

   

  - நா. முத்துக்குமார்

 • கோடையின் இறுதி நாட்கள்

  கோடையின் இறுதி நாட்கள்,

  ஒவ்வொன்றாய் அணையும் விளக்குகளைப் போல்

  பிரகாசித்து மங்குகின்றன.

  ஒரு விளக்கை விட்டு

  இன்னொரு விளக்கிற்குப் பறக்கும்

  ஈசலாய் நான்.

  - பார்த்திபன்

 • இன்றா சுதந்திரம்?

  இணையற்ற
  இந்தியாவிற்கு
  இன்றா
  சுதந்திரம்???

  ஊரை அடித்து
  உலையில் போடும்
  ஊழல் பெருச்சாளிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  பூமத்திய கோட்டையே
  புவியிலிருந்து விரட்டிய
  வறுமைக் கோட்டிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  சொர்க்க பூமியதை
  இரத்த பூமியாக்கிய
  ஈனப் பிறவிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  சாதியின் பொயரால்
  சண்டையிடும்
  சண்டாளர்களிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  பெண்மையைப்
  பேணிடாத
  பேடிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  கையூட்டினால்
  கொழுத்திட்ட
  களவாணிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  மதத்தின் பெயரால்
  மனிதத்தை கொல்லும்
  மனித மிருகங்களிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  கல்வியினை
  காசுக்கு விற்றிடும்
  கயவன்களிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  காவல்துறையை
  களங்கப்படுத்தும்
  கருங்காலிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  மருத்துவத்துறையின்
  மாண்பினை மறந்திட்ட
  மானமிழந்தவரிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  ஓட்டுக்காக மட்டும்
  ஒன்றுகூடிடும் பச்சை
  ஓணான்களிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  தேர்தலன்று மட்டும்
  தேடி வந்திடும்
  தேச துரோகிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  தாய்மொழியினை
  தலைகுனிவாய் நினைக்கும்
  தருதலைகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  ஆன்மீகமதன் பெயரால்
  அநியாயம் செய்திடும்
  அதர்மிகளிடம்
  இருந்து
  இப்போதைக்கு கிடைக்குமா
  இந்தியாவிற்கு சுதந்திரம்??

  இப்போது
  கூறுங்கள்
  இன்றா சுதந்திரம்
  இந்திய தேசத்திற்கு!!

   

  - இட்ரிஸ் பாண்டி

 • இளமை

  இளமை

  ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும்

  உடனே புறப்படவேண்டுமென்றும்

  கேட்டுக்கொண்டது இளமை

   

  எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை

  மென்மையான குரலில்

  ஒரு தாயைப்போல அறிவித்தது

   

  தடுக்கமுடியாத தருணமென்பதால்

  ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்

  நாள் நேரம் இடம்

  எல்லாவற்றையும் பேசிமுடித்தோம்

  முழுச் சம்மதத்தோடு

  தலையசைத்துச் சிரித்தது இளமை

   

  நாற்பதைக் கடந்து நீளும்

  அக்கணத்தில் நின்றபடி

  இளமையின் நினைவுகளை

  அசைபோடத் தொடங்கியது மனம்

   

  இளமை

  மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம்

  நீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு

  அதன் கொத்துகளிலிருந்து

  ஒவ்வொரு மலராக உதிர்ந்து விழுகின்றன

   

  வீடெங்கும் நிறைந்திருக்கின்றன

  கடந்துபோன இளமையின்

  காலடிச் சுவடுகள்

  நாவில் விழுந்த தேந்துளியென

  ஊறிப் பெருகும் சுவைபோன்றது

  மறைந்த இளமையின் கனவு

   

  கரைந்துபோன இளமைதான்

  காதலாக கனிந்து நிற்கிறது

  இளமையின் மதுவை அருந்தியவையே

  இக்கவிதைகள்

   

  இன்றும் பொசுங்கிவிடாமல்

  நான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்

  இளமையால் அன்பளிப்பாகத் தரப்பட்டவை

   

  குறித்தநாள் முன்னிரவில்

  எங்கள் தோட்டத்தில்

  அந்த விருந்தை நிகழ்த்தினோம்

  எதிரும்புதிருமாக அமர்ந்து

  பழங்கதைகள் ஆயிரம் பேசினோம்

  காரணமின்றியே கைகுலுக்கி

  கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டோம்

  ஒரு மிடறு  மதுவை அருந்தியதுமே

  ஆனந்தம் தலைக்கேற

  இனிய பாடலொன்றைப் பாடியது அது

  உற்சாகத்தில் நானும் பாடினேன்

   

  இவ்வளவு காலமும்

  சிரிக்கச்சிரிக்க வாழ அனுமதித்த இளமைக்கு

  நன்றியைத் தெரிவித்தபடி

  போய் வருக என்று

  ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன்

  இறுதியாக ஆரத்தழுவிய இளமை

  என் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது

  என்னைவிட்டு விலகுவதில்

  அதற்கும் துக்கம் அதிகம்

  தெருமுனை திரும்பும்வரை

  திரும்பத்திரும்பப் பார்த்துச் சென்றது

   

  குழந்தைமை உதிர்ந்ததைப்போல

  பால்யம் விலகியதைப்போல

  இளமையும் நெகிழ்ந்து உதிர்ந்தது

  ஒரு சகஜமான செயலைப்போல

   

  நான் இளமையை இழந்தால் என்ன

  எனக்குள் இன்னும் இனிக்கிறது

  இளமையின் முத்தம்

   

  - பாவண்ணன்

 • உரிமை மனு

  தவண்டு தவண்டு முடியாமல் -
  மீண்டும்
  தொட்டில் தேடும்
  மழலையின் அவஸ்த்தை
  அடைந்து கொள்ள முடியாமல்
  அடங்கிப் போகும்
  என் கனவுகளுக்குள்


  குயில் கூடு கட்டுமென்று
  காத்திருப்பார் எவரும்
  கூடு கட்டும் காகத்தை
  கண்டுகொள்ள விரும்பவில்லை


  தாகமுள்ள ஜீவனுக்கு
  தண்ணீர் தர நாட்டமில்லை
  தாகமூட்டி சிலருக்கு ஏனோ
  பன்னீர் பிச்சை போடுகிறார்?


  போட்டிகள் இல்லாமலே
  தோற்றுப் போகிறேன்
  போர்வைகள் இல்லாமலே
  போர்த்தப் படுகிறேன்


  உரிமை கேட்டு என் நாவும்
  உதட்டோரம் எட்டிப் பார்க்கும்...

  'வாடகை வெளிச்சத்தில்
  வெள்ளி நிலா கைக்கொட்டும்..
  நகைத்துத் தூற்றும்
  மெய்யழகன் கதிரவனை...

  கதிரவனும் காத்திருப்பன்
  என்றும் போல
  விடியலோடு விடிவு வரும்
  நம்பிக்கையில் '

  அஃறிணை  உதாரணங்களோடு
  அன்பான அடக்கு முறைகள் -
  உதட்டோடு என் நாவை
  கட்டிப் போடும்

  - ஜாவிட் ரயிஸ்

 • நாகரிகம் ஏனோ இன்னும்?

  நாகரிகம் ஏனோ இன்னும்?

   

  காலம் கடந்து உயிர் மூச்செறிந்து
  வானம் பொசுங்கியது
  வைகுண்டம் முதல் வங்கம் வரை
  பேரதிர்வு
  புத்தி பேதலித்துப் போன
  மனிதக்கூட்டம்
  சுத்திச் சுத்தித் தலையாட்டியே
  வாழ்க்கையைத் தொலைத்து கால்நூறாண்டுகள்
  கடந்து விட்டன

  வானுயர்ந்த மரங்களும் பத்தைகளும்
  அழிக்கப்பட்டு
  சூழல் சுத்தம் பெற்றுத்தான் என்னவோ
  இதனால் மீதியில் தொலைந்துபோனது
  இயற்கையும் மனிதத்தலைகளும் தான்

  காகம் இருக்க பனம்பழம் விழுந்ந கதை
  மீண்டும் மேடையேறியது
  தெளிவற்ற கருத்துக்கள்
  முடிவுகள்
  மனித வம்சத்தையே புதைக்க
  ஊன்றுகோலாகியது இப்போதான்
  போர்க்கால மேகங்கள் மெல்ல
  விலகுமென இருக்க
  போருக்கான ஆயத்தங்கள் ஏன் இன்னும்?

  பகட்டான வாழ்க்கை
  பாதகர் யாரும் உய்யவே வேண்டாம்
  உங்கள் வாயசைப்புக்கள்
  இன்னும் இன்னும் எத்தனையோ
  பாதகர்களை உரமிட்டுச் செல்லும்

  பேதமின்றி சமத்துவம் தொலைந்து
  போன பின்னும்
  நாகரிகம் ஏனோ இன்னும்?


  - எதிக்கா

 • நதியும் நானும்

  நதியும் நானும்

   

  பார்வையின் எல்லைக்குள் எங்கும் மழையேயில்லை
  எரியும் மனதை ஆன்மீகத்தால் குளிர்விக்க
  ப்ரிய நேசத்தால் நிறைந்த இன்னுமொரு மழை
  அவசியமெனக் கருதுகிறேன் நான்

  சற்று நீண்டது பகல் இன்னும்
  மேற்கு வாயிலால் உள்ளே எட்டிப் பார்க்கும் பாவங்களை
  அதற்கேற்ப கரைத்து அனுப்பிவிடத் தோன்றுகிறது

  வாழ்நாள் முழுவதற்குமாக சுமந்து வந்த அழுக்குகள் அநேகம்
  வந்த தூரமும் அதிகம்
  எல்லையற்றது மிதந்து அசையும் திசை
  இன்னும் நிச்சலனத்திலிருக்கிறது நதி

  எனினும்
  கணத்துக்குக் கணம் மாறியபடியும்
  ஆழத்தில் அதிர்ந்தபடியும் கிடக்கிறோம்
  நதியும் நானும்

  - ரொஷான் தேல பண்டார (மொழிபெயர்ப்பு: எம்.ரிஷான் ஷெரீப்)

 • கண்ணீர்ப் பனித்துளி நான்

  கண்ணீர்ப் பனித்துளி நான்

   

  மயிர் கூச்செரியும் கடுங்குளிரில்
  நிலவுமறியாது
  பனிக்கட்டிகளுக்குள் மறைந்திருக்கும்
  கண்ணீர்ப் பனித்துளி நான்

  ஆயிரக்கணக்கில் தாரகைகள் பூக்கும்
  ஆகாயம் அனுப்பும் ஒளிக்கீற்று மேல் காதலுற்று
  சூரியனுக்கே காதல் கடிதங்களை வரையும்
  கண்ணீர்ப் பனித்துளி நான்

  நாளை உதிக்கவிருக்கும் விடிகாலையில்
  உனது வெளிச்சத்தை முத்தமிட்டு
  அந்த உஷ்ணத்திலேயே உருகிக் கரைந்துவிடும்
  கண்ணீர்ப் பனித்துளி நான்

  - ரொஷான் தேல பண்டார (மொழிபெயர்ப்பு: எம்.ரிஷான் ஷெரீப்)

 • வெற்றுக் கோப்பை

  சிலரது கோப்பையில்

   

  சிலரது கோப்பையில்
  பால்
  நிறைந்த வண்ணமாய்.........

  சிலரது கோப்பையில்
  தேன்
  வழிந்த வாராய்..........

  சிலரது கோப்பையில்
  கசாயம்
  குறைந்தபாடில்லை

  இன்னும்
  சிலரது  கோப்பையில்
  எந்நேரமும்
  மது ததும்பல்

  எது
  நிறைந்தென்ன

  ஒரு நாள்
  வெறுமையடைந்து விடுகிறது
  எல்லோருடைய கோப்பையும்

  - புதிய ராஜா

 • வருக வருக கி.பி.2013!

   

  மாயன் பாடிய
  முகாரிக்கு
  முடிவுறை எழுதி
  பூபாளம் பாடி
  புத்தொளி வீச வரும்
  புத்தாண்டே வருக...!

  இருண்ட தமிழகம் ஓளி பெற
  வறண்ட மேகங்கள்  
  கருமேகமாய் மாறி
  திரண்டு வந்து மாரியாக - கரை
  புரண்டு ஓட...
  புத்தாண்டே வருக...!

  ‘சந்தர்ப்பம்’ என்ற
  புத்தம் புதிய புத்தகத்தின்
  முதல் அத்தியாயமாக
  புது வருட முதல் நாள்....!

  நாம் எழுதப் போகும்
  வார்த்தைகளுக்காக
  எழுத்துகள் இன்றி
  எதிரில் விரிக்கப்பட்டிருக்கிறது...!

  புதுமையைப் படைப்போம்
  புரட்சியை வித்திடுவோம்
  இத்தரை வீதியில்
  முத்திரை இடுவோம்...!

  வருக வருக கி.பி.2013....!
  தருக தருக சுபிட்சத்தை...!

  - ரிஷ்வன்

 • கொடுக்கிறேன்...

   

  கொடுக்கிறேன்

   

  கொடுக்கிறேன் என்று நினைப்பவனே!
  கொடுப்பதற்கு நீ யார்?

  நீ கொடுப்பதாக நினைப்பதெல்லாம்
  உனக்குக் கொடுக்கப்பட்டதல்லவா?

  உனக்கு கொடுக்கப்பட்டதெல்லாம்
  உனக்காக மட்டும்
  கொடுக்கப்பட்டதல்ல

  உண்மையில் நீ கொடுக்கவில்லை
  உன் வழியாகக்
  கொடுக்கப்படுகிறது

  நீ ஒரு கருவியே

  இசையைப்
  புல்லாங்குழல்
  கொடுப்பதில்லை

  இசை வெளிப்படுவதற்கு
  அது ஒரு கருவியே

  இயற்கையைப் பார்
  அது கொடுக்கிறோம் என்று நினைத்துக்
  கொடுப்பதில்லை

  தேவையுள்ளவன்
  அதிலிருந்து
  வேண்டியதை
  எடுத்துக்கொள்கிறான்

  நீயும் இயற்கையின்
  ஓர் அங்கம் என்பதை
  மறந்துவிடாதே

  கொடுப்பதற்குரியது
  பணம் மட்டும் என்று
  நினைக்காதே

  உன் வார்த்தையும்
  ஒருவனுக்குத்
  தாகம் தணிக்கலாம்

  உன் புன்னகையும்
  ஒருவன் உள்ளத்தில்
  விளக்கேற்றலாம்

  ஒரு பூவைப் போல்
  சப்தமில்லாமல் கொடு

  ஒரு விளக்கைப் போல
  பேதமில்லாமல் கொடு

  உன்னிடம் உள்ளது
  நதியில் உள்ள நீர்போல்
  இருக்கட்டும்

  தாகமுடையவன் குடிக்கத்
  தண்ணீரிடம்
  சம்மதம் கேட்பதில்லை

  கொடு
  நீ சுத்தமாவாய்

  கொடு
  நீ சுகப்படுவாய்

  கொடு
  அது உன் இருத்தலை
  நியாப்படுத்தும்

  - கவிக்கோ அப்துல் ரஹ்மான்

   

   

   

   

 • சுதந்திர தினம்

   

  சுதந்திர தினம்

  உன் குலம்
  அழிஞ்சேபோச்சுன்னு
  குதிச்ச
  நா குளத்துல
  கைய வச்சதுக்கு

  கொச கொசன்னு
  வழியிர குருதி காயத்தோட
  அண்ணன் பிணம் வந்தப்போவ
  அடிவயித்த புடிச்சிகிட்டு
  அப்பவே போயிட்டா ஆத்தா

  அடிச்சி புடிச்சி
  அப்பனுக்கும் போட்டானுவோ
  பொய் வழக்குகள

  மேல் சட்டையே போடவிடாம
  பொரட்டி பொரட்டியெடுத்துட்டு
  கையில குடுக்குற
  இத்துனூண்டு
  கொடியும் குண்டூசியும்

  கேடுகெட்டு நா
  கொண்டாடனுமா
  சுதந்திர தினம்

  - கவிமதி

   

   

   

   

 • பிரிவின் நீட்சி

  பிரிவின் நீட்சி

  புதுப் புது அவதரிப்புகளாக
  ஓவ்வொரு பயணமும்

  கையசைக்கத் தாமதித்து
  கலங்கிய கண்களைத் திருட்டுத்தனமாக
  துடைத்துக் கொண்டும்
  சிரிக்க முடிகிறதே சில சமயங்களில்

  அழுகையை அடிமனதில்
  அடக்கிக்கொண்டு வார்த்தை வராமல்
  முகம் கோணி தலையசைத்து
  விடைபெறும்போது
  விருட்டெனச் சிந்தும்
  சில கண்ணீர்த் துளிகள்

  கவலையில் முகம் சோர்ந்து
  கவலைபடாதே எனச் சொல்லும்
  தோரணையில் ஒவ்வொன்றும்
  உறவுக்குள்ளும் நட்புக்குள்ளும்
  மனதை விட்டுவிட்டு
  வாழ்வை கோபிக்க முடியா
  பட்சமாய
  தொலைவாய் சென்று
  திரும்பிப் பார்க்கும் கணங்கள்

  ஈரம் படாத இதழ்கள்
  வறட்டுப் புன்னகையில்
  கை குலுக்கி
  விடை கொடுத்த முகங்கள்
  அதே இடத்தில் எல்லாம்
  புள்ளியாய்க் கண்ணில் கரைய

  விசும்பும் இதயத்தோடு
  பயண நடுவில் இமை மூடி
  தூங்கும் பாவனையில்
  பின் நோக்கி உருளும் நினைவுகள்

  எல்லாம்
  சிறு பிரிவாய் சமாதானம்

  - அறிவுநிதி

   

   

   

   

   

 • கவிதை "போல"

   

   

   

   

  கவிதை போல

   

  குழந்தை அழும் !
  அழுவதால் நீ
  குழந்தையாக முடியாது !

  பூ புன்னகைக்கும் !
  புன்னகைப்பதால் நீ
  பூவாக முடியாது !

  காற்று தழுவும் !
  தழுவுவதால் நீ
  காற்றாக முடியாது !

  நதி ஓடும் !
  ஓடுவதால் நீ
  நதியாக முடியாது !

  மழைத்துளி விழும் !
  விழுவதால் நீ
  மழைத்துளியாக முடியாது !

  வானவில் வளையும் !
  வளைவதால் நீ
  வானவில்லாக முடியாது !

  கம்பன் கவிசெய்தான் !
  கவிசெய்வதால் நீ
  கம்பனாக முடியாது !

  மாதிரியின் முகமூடியில்
  தன் முகவரி இழந்தவனே !

  நில்!
  சூரியன் தனை உள்வாங்கித்
  தன் சுயம் இழக்காத
  நிலவைப் பார் !

  கவனி !
  மாதிரியைப் படி
  அதன் மாதிரி நீ
  ஆகிவிடாதபடி !

  செல் !
  மாதிரியைத் தொடர்ந்து அல்ல !
  மாதிரியின் பாதைகளில்
  தொடர்ந்து...

  போலச் செய்து
  போலியாகி விடாதே !

  மாதிரி
  சூரிய ஒளிகீற்றுகள் தான் !
  அதில்
  உன் சுயமெனும்
  கண்களை இழந்துவிடாதே !

  மாதிரியை
  உன் தோளில் வை !
  மாதிரியின் தோளில்
  நீ சவாரி செய்யாதே !
  ஏனென்றால்
  உன் சுவடுகள்
  தெரியாமல் போய்விடும் !


  - பாண்டூ

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி