கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

காதல் கவிதை

 • காலந்தோறும் காதல்

   1. சங்க காலம்
  ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
  குருகு பறக்கும் தீம்புனல் நாடன்
  கற்றை நிலவு காயும் காட்டிடை
  என்கை பற்றி இலங்குவளை நெகிழ்த்து
  மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
  வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
  பசலை உண்ணும் பாராய் தோழி

  2. காவிய காலம்
  பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
  மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
  கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
  கரும்பிருக்கும் என்பார் கவி.

  3. சமய காலம்
  வெண்ணிலவால் பொங்குதியோ
  விரக்தியால் பொங்குதியோ
  பெண்ணொருத்தி நான்விடுக்கும்
  பெருமூச்சாற் பொங்குதியோ பண்ணளந்த

  மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
  விண்ணளந்து பொங்குதியோ
  விளம்பாய் பாற்கடலே!

  4. சிற்றிலக்கியக் காலம்
  தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
  துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
  தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
  சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
  முலை அதிரும்படி மணி உதிரும்படி
  மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
  மாரன் பகைமுடிக்கத் தேவையாள்

  5. தேசிய காலம்
  சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
  சித்தத்திலே வந்து மேவினாள்
  கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
  கவியில் காதல்ரசம்
  விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
  வீணை கரம்கொண்டு மீட்டினாள்
  மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
  மறைந்தகதை எங்கு சொல்குவேன்?

  6 .திராவிட காலம் - 1
  இல்லாத கடவுள் போன்ற
  இடைகொண்ட பெண்ணே உந்தன்
  பொல்லாத அழகு பாடப்
  பூவாடும் கூந்தல் பாட
  சல்லாப விழிகள் பாடத்
  தனித்தமிழ் கொண்டு வந்தேன்
  நில்லாமற் போனால் கூட்டில்
  நிற்குமோ எந்தன் ஆவி?

  7. திராவிட காலம் -2
  விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
  விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
  முத்தமென்ற சொல்போல - நான்
  இதழ்சேர வரும்போது உதடுஒட்டாத குறள்போல - நீ
  தள்ளியா நிற்பது? விளையாட வேண்டும் வாடி என் கண்ணே
  விடிவெள்ளி கண்ணயரும் முன்னே

  8. புதுக்கவிதைக் காலம் -1
  ஏப்ரல் சூரியன்
  டீசல் புகை
  பேருந்து நெரிசல்
  அலுவலக எரிச்சல்
  இவையெதிலும் வாடாமல்
  பத்திரமாய் வைத்திருக்கிறேன்
  உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
  யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
  உன் கருங்கூந்தற் சிறுபூவை

  9. புதுக்கவிதைக் காலம் - 2
  உன்வீட்டு
  ஆன்ட்டனாவிலும்
  என்வீட்டு
  நைலான் கொடியிலும்
  தனித்தனியே காயும்
  நேற்று
  ஊருக்கு வெளியே நாம்
  ஒன்றாய்
  அழுக்குச் செய்த உள்ளாடைகள்

  - வைரமுத்து

 • என் காதலும் நானும்

  http://i120.photobucket.com/albums/o196/monkeybrainsphotos/SadLadyTearShell.gif

  இனி எனக்குப் பேச எதுவுமில்லை
  வாழ்வின் மெய்மைகளையெல்லாம் களைந்துவிட்டு
  இறங்கிய நதியில்
  ஊர்ந்து வரும் அவன்
  பருகக் காத்திருந்ததுபோல் ஆயிற்று
  மரணம் சம்பவிக்கும் அவனது தேகத்தின்
  எச்சில்குளத்தில் மூச்சுத் திணறுகிறேன்
  ஒரே காதலின் மாதிரிகள் தாம் எல்லாமும்
  எதுவும் தவறில்லை;
  கனவுகளிலிருந்து பிய்த்து இழுத்துச் செல்லும்
  துயரத்தின் வலிமையே
  காலமாய் உருமாறுகிறது
  நீரைப் பிரித்துப் பிரித்துக் களிக்கும்
  அவன் பரிசளித்த மயானம்,
  குருவிகள் வந்தமர ஏங்கும் எனது விழிகள்
  இவற்றோடெல்லாம்
  நான் என்ன செய்துவிடமுடியும்?
  புத்தகங்களுக்குள் உலாவும் கதைராட்டினத்தில்
  அவன் கட்டிவிட்ட முத்தங்கள்
  சுழன்று உதிர்ந்துகொண்டேயிருக்கின்றன
  இனி எனக்குப் பேச எதுவுமில்லை
  அவனிலிருந்து வெளியேறிப்
  பறக்க வேண்டும் பிளிறி
  கரையில் உலரும் எனது ஆடைகளையும்
  வாரிக்கொண்டு

  -  குட்டி ரேவதி

   

 • முதற்பெண்ணுக்குச் சில வரிகள்

   Thanks! http://i22.photobucket.com/albums/b336/Godiva_2000/FullMoonGirl-1.gif

  இரவின் திரைக்குள் மறையும் திசைகள்
  இரண்டு அலைவேளைகளுக்கு இடையில் மௌனம்

  அல்லது

  இரண்டு மௌனங்களுக்கு இடையில் அலைமீட்டல் என
  கரையின் புறங்களில் கடலின் முடிவற்ற சங்கீதம்

  உனது பிம்பம்
  நிலைக்கண்ணாடியிலிருந்து கிளம்பி வந்ததுபோல்
  நடந்து மறைந்தாள் எவளோ.

  இதோ
  நீ எதிர்ப்பட்ட அநாதிக்காலத்தின் ஏதோ ஒரு நொடி
  ஆனந்த வெளியாக ஒளி ததும்பி
  நிற்கிறது நினைவில்

  இதோ
  பார்வையில் அகலும் பெண்முகங்களில் எல்லாம்
  உனது நீர்த்திரைக் கண்களைத் தேடி அலுக்கிறது
  பொழுதின் தனிமை

  பரிசுப்பொருட்களும் குதூகலமுமாய் வந்தவர்கள்
  மயானம் கலைபவர்களாய்ச் சொல்லாமல் போகிறார்கள்
  நட்போ காதலோ
  இப்படித்தான் வாய்க்கின்றன பெண்ணே
  எனது உறவுகள்

  இப்போதும்
  நீ வரலாம் என்று திறந்துவைக்கும் கதவுகளில்
  வெறுமையின் ஒளி

  இப்போதும்
  மறதியின் இருளில் மெல்லச்சரியும் நாட்களின் விளிம்பில்
  உனது மூக்குத்தியின் அலையும் சுடர்

  உனது நேசப்பெருவெளி பசுமை தீய்ந்து
  பனியில் உறைந்தது எப்போது?
  உனது அன்புப்பிரவாகம் உலர்ந்து
  பாறைகளின் மௌனம் திரண்டது எப்போது?

  கானல்கள் உன் பதில்கள்
  அறிந்தும்
  என்னோடு அலைகின்றன கேள்விகள்

  இனி
  காத்திருக்கப் பொறுக்காது கடலின் சங்கீதம்

  நாளை
  நமது நேசத்தை ஒப்படைக்கப்போகிறேன்
  காலத்தின் காட்சி சாலையில்.

  எங்காவது
  எப்போதாவது
  வழிகள் கலந்து பிரிகின்றன உறவுகள்

  இனி
  காற்றில் ஆறும் காயங்கள்
  வடுவாக எஞ்சும் உன் பெயர்

  இவ்வளவும் ஏன்,
  இன்னும் நான் நேசிக்கும் முதல்பெண் நீ

   -  சுகுமாரன்

 • திரும்பாத முத்தம்

   Thank you! http://fineartamerica.com/images-medium/hot-kiss-davinia-hart.jpg

  இடப் படாத முத்தமொன்று
  இரவின் முடிவற்ற கரிய தோள்களில்
  வந்தமர்ந்தபோது
  பனிக் காலத்தின் ஆயிரம்
  உறைந்த கண்கள்
  அதை உற்றுப் பார்த்தன  

  இடப்படாத அந்த முத்தம்
  தன் கூச்சத்தின்
  இறகுகளைப் படபடவென
  அடித்துக்கொண்டது  

  திசை தப்பி வந்த
  வேறொரு உலகத்தின் பறவையென
  அன்பின் துயர வெளியின் மேல் அது
  பறந்து பறந்து களைத்துப்போயிருந்தது  

  அதற்கு தான்
  அந்த கணம் வந்தமர்ந்த
  இடம் குறித்து
  எந்த யோசனையுமில்லை
  ஒரு தந்திரமில்லை
  ஒரு கனவு இல்லை  

  நடுங்கும் கைகளால்
  நான் அதைப் பற்றிக்கொள்ள
  விரும்பினேன்  
  இடப்படாத அந்த முத்தம்
  சட்டென திடுக்கிட்டு
  எந்தக் கணமும் பறந்துபோய்விடலாம்  

  யாராலும் பெற்றுக்கொள்ள முடியாத
  காதலின் ஒரு தானியத்தை
  அதற்கு எப்படியாவது ஊட்டிவிட முயன்றேன்

  இடப்படாத முத்தங்கள்
  எதையுமே பெற்றுக்கொள்வதில்லை
  எவ்வளவு தூரம் பறந்தாலும்
  அவற்றிற்குப் பசி எடுப்பதில்லை  

  அவை
  பிசாசுகளைப் போல காற்றில் வாழ்கின்றன
  பனியைப்போல தனிமையில் நிகழ்கின்றன  

  ஒரு வேளை
  நீ அந்த முத்தத்தை
  இட்டிருந்தால்
  அது முத்தமாகவே இல்லாமல்
  போயிருக்கலாம்

  - மனுஷ்ய புத்திரன்

 • உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்

   Thank you! http://99daz.com/dazcox/wp-content/uploads/2008/03/moongirl500.jpg

  உன்னை இழந்துவிட்டிருக்கும் இக்கணத்தில்
  திரும்பத் திரும்ப தோன்றுகிறது
  உன்னை இன்னும் சற்றே அடைந்திருக்கலாமென  
  அடைந்திருந்த கணங்களிலோ
  அதற்கு மேல் அடைய எதுவுமே இருந்திருக்கவில்லை  
  இழப்பின் கணங்கள்
  இந்தக் குளிர் இரவில்
  தின்று வாழ்கின்றன
  அடைதலின் கணங்களை

  - மனுஷ்ய புத்திரன்

 • காமம் செப்புதல்

  நீ தாகபூமியும்
  நான் நீர்மேகமுமாய் இருந்தோம்
  பிணக்குக்கு முன்பு.

  உன் விடாய் தணிக்கப்
  பொழியத் தயங்கியதே பிணக்கின் காரணம்

  பிணங்கிக் குமுறிய பூமி
  மேல்நோக்கி உருண்டது
  நின்று தயங்கிய மேகம்
  தழைந்திறங்கி மல்லாந்தது

  இந்த உடற்பெயர்ச்சியில்
  இப்போது
  பூமி நான்
  மேகம் நீ

  பூமியை உறிஞ்சிவிடப்
  பொழிகிறது
  பொழிந்து தணிகிறது மேகம்

  சினம் தணியக்
  கூடலும் ஆயுதம் ஆவதெப்படி?
  யோசித்துக் கிடந்த என் உதடுகளில்
  சொட்டி விழுகிறது உன்
  ஒரு துளிக் கண்ணீர்

  அந்த ஒற்றைத் துளியில்
  நூறு கடலின் உவர்ப்பு
  அந்த ஒற்றைத் துளிக்கு
  உறைபனிப் பாறையின் கனம்.

  - சுகுமாரன்

 • நம் காதல்  உன் உச்சந்தலைபரப்பு
  சோலையில்
  விழித்தெழுந்து,

  உன் நெற்றிபரப்பு
  தகவல் பலகையில்
  என் நிகழ்ச்சி நிரலை
  தெரிந்துகொண்டு,

  உன் விழிகளின்
  சூரிய ஒளியில்
  என் பயணத்தின்
  பாதையை அறிந்து கொண்டு,

  உன் உதடுகளின் அசைவினால்
  உற்பத்தியாகும் கட்டளைகளை
  கவனத்தில் கொண்டு,

  உன் காதின் பொன் வளையங்கள்
  எழுப்பும் ஓசையின்
  உதவி கொண்டு,

  உன் இதயத்தை மட்டுமே
  இலக்காக நினைத்து கொண்டு,

  இவ்வுலக முடிவுவரை
  நான் மேற்கொள்ள விரும்பும்
  வெற்றிப் பயணம்...
  நம் காதல்!

  - தமிழ்மதியன்

 • மௌனம் பேசும் வார்த்தை


  குளிர் காலத்தின் இரவொன்றில்
  நீ எனக்காகப் போர்த்திய போர்வையில்
  உன் பிரியத்தின் கதகதப்பை உணர்ந்தேன்

  மழைக்காலத்தின்
  மாலை நேரத்தில்
  நீ தந்ந தேனீரை விட
  சுவையாக இருந்தது
  உனது அன்பான முத்தம்

  அறை முழுக்க
  மின் விளக்குகள் ஒளிர்ந்தாலும்
  நீ இல்லாத அறை
  இருண்மையை எனக்குள் தடம் பதித்தது

  "வான்கா"வின் நவீன
  ஓவியத்தைப் போன்று
  என் உணர்வுகளைப்
  புரிந்து கொள்ளாமல்
  நீ ஊடலிடும் சமயத்தில்
  உதிர்க்கும் வதைச்சொல்
  உணர்த்தும்
  உன் மனதின் வன்மத்தை

   

  ஊடலுக்குப் பிறகு
  சங்கீதமாய் ஒலிக்கும்
  உனது சமாதான முயற்சியான
  மெல்லியக் குரல்

  தனிமையில் நான் இருக்கும் தருணத்தில்
  உன் புகைப்படத்தின் வழியே கசியும்
  மௌனம் பேசும் வார்த்தைகளை
  யாரால் கவிதையாக மொழி பெயர்க்க முடியும்?

  - நீலநிலா செண்பகராஜன், விருதுநகர், இந்தியா

 • காதலிக்கத் தொடங்கிவிட்டேனா?

  உன் நினைவில்...

  கருப்பு வெள்ளை
  வானவில் காண்கிறேன்!

  கலவை நிறத்தில்
  நிலவை ரசிக்கிறேன்!

  வெளிச்சக்கூட்டில் ஒளிந்து கொள்ள
  ஓர் மறைவைத்
  தேடுகிறேன்!

  விதவை வானில் விடிய விடிய
  வெளிச்சம்
  தேடுகிறேன்!

  உன் வீட்டு வாயில் திறக்கும் வேளையில்
  செவ்வாயில்
  ஜீவிக்கிறேன்!

  கடவாயில் நீர் வடிய
  கனவுலகில்
  நான் வசிக்கிறேன்!

  ஒரு காலில் ஆண் செருப்பும்
  மறுகாலில் பெண் செருப்புமாய்
  ஜோடி சேர்த்துப் பார்க்கிறேன்!

  தொலைபேசி சிரிக்கும்போதெல்லாம்
  தொடர்பில் நீ இல்லையென்றால்
  தொலைந்து போகிறேன்!

  என் கவிதைத் தொகுப்பிற்குள்
  உன் கால் கொலுசின்
  தடம் தேடுகிறேன்!

  என் இளமை பூந்தோட்டத்தில்
  உன் உருவத்தில்
  மலர் தேடுகிறேன்!

  பிறப்பின் மகிழ்ச்சிக்கும்
  இறப்பின் இரங்கலுக்கும்
  இடையில்
  என் இனிய இளமைப் பருவத்தில்
  ஏன் இந்த இதயத்தில்
  ஊஞ்சலாட்டம்...?

  காதலிக்கத் தொடங்கிவிட்டேனா ?

  - தமிழ் மதியன்

 • ஆனாலும் புடிச்சிருக்கு...

  "எழுதி எழுதி
  என்னத்த கண்ட?"
  மனசாட்சி என்னைக் கேட்டாலும்
  எண்ணத்தில் உள்ளதை எல்லாம்
  எழுதிக் குவிக்கின்றேன்.
  உள்ளுக்குள் போராட்டம்
  ஓராயிரம்.
  ஆனாலும் புடிச்சிருக்கு
  அவளைப் பற்றி எழுதுவதற்கு

  - சங்கீதா

 • சில காதல் கவிதைகள்

  பொங்கல் வைத்து
  படையலிட வருகிறாய்;
  அய்யனார் கையில்
  பூ!

  உன் பார்வை பற்றவைத்தது;
  உருகி உருகி
  எரிகிறது உயிர்!

  என் கண்ணீர்
  துளிகளால்;
  உனக்கு வைரமாலை!

  உன் அறை
  உன் பிம்பம்
  என் கோவில்
  என் சாமி!

  மூங்கில் காடு புகும்
  காற்று அழுது திரும்புகிறது;
  உன் நினைவில் அரற்றும்
  எனைப் போலவே!

   

  - ப்ரியன்

 • அழகு தேவதையே..!


  அவசரமாய் நான் வீதி
  கடக்கையிலும் நீயே
  நினைவுக்கு வருகிறாய்

  எப்போதோ உன்னோடு
  வீதி கடக்கையில் நீ
  குட்டுவைத்து குழந்தைபோல்
  எனை கூட்டிச் சென்றாயே

  என்னை எழுத
  வைப்பதற்காகவே
  கவிதையாய் படுத்துக்
  கிடப்பாய் எனக்கு முன் நீ

  நீ எழுதிய முதல் கவிதை நான்
  ஒவ்வொரு பத்திரிகை குப்பைத்
  தொட்டியிலும் கிழிந்து கிடக்கிறேன்

  உன்னை விட தொட்டால்
  சிணுங்கி பரவாயில்லை
  நீ பேசினாலே சிணுங்கிறாயே

  பெண்களுடன் சுற்றி
  இருக்கீங்களா என்று
  கேக்கிறாய்
  இல்லையென்றால் நீ
  எனக்கு தேவதையாய்
  தெரிந்திருக்கமாட்டாய்

   

  -யாழ் அகத்தியன்

 • காதல் காசுக்காக விற்கப்படுகிறது...

  நினைவுகள் எழுதிய
  நிலவு
  வெட்கித் தலைகுனிந்து
  புருவம் உயர்த்தி
  நீ பார்த்த அந்த
  பார்வை முட்கள்
  சிரிப்பு வரைந்த
  குழி விழுந்த கன்னங்கள்
  உன் புன்னகை உதடுகள்

  ரசித்தது உண்மை

  பருவம் படர்ந்த
  முனைப்புகள்
  நான் விழுந்த
  அந்த தடங்கள்

  வெளிச்சம் காட்டிய
  உன் மனது
  விழுந்துகொண்ட
  என் மனது

  நீ உடுத்திக்கொண்ட "சுடிதார்"
  உன் "சோல்" லில் சுற்றிக்கொண்ட
  நானும்....
  என்னைப்பற்றிக் கொண்ட
  நீயும்....

  உன்னோடிருந்த அந்த நாட்கள்
  நம்மை எழுதிக்கொண்டது
  "காதல் பறவைகள்" என்று
  இப்போது எழுதி்க்கொள்ளட்டும்
  அது ஒரு நிலாக்காலமென்று

  என்னை உடுத்திக்கொண்ட
  என் குடும்பம்
  என் காதலை விட
  கரன்சியைப் பார்க்கிறது
  என் தங்கச்சியின் சீதனத்துக்காய்

  விட்டுவிடு என்னை
  தொலைகிறேன் நான்...

  என்மானம் விற்கப்படப்போகிறது
  முடிந்தால்
  கேள்விப்பத்திரத்துக்கு
  விண்ணப்பித்துக்கொள்...

  கிடைத்தால் மீண்டும்
  துளிர்க்கும் நம் காதல்

  வெடக்கப்படுகிறேன்
  துக்கப்படுகிறேன்
  முகம் புரியா யாருக்கோவாக
  நான் அறியா எவளுக்கோவாக
  என் காதல்
  புதைக்கப்படப்போகிறது

  என் காதல்
  காசுக்காக
  கரைக்கப்படப்போகிறது

  காதல் தேவதையே
  என்னை தூக்கிலிடு

  அதற்கு முன்
  என்னை காட்டிய
  எனது குடும்பத்தை பற்றி
  சற்றே.....
  யோசித்துக்கொள்
  என் குடும்பத்தின்
  வாழ்க்கை புகையிரதம்
  இந்த தண்டவாளத்தால் தான்
  ஓட்டப்படுகிறது..

  நீங்கள் சொல்லுங்கள்...

  பாழாயப்போன என்
  காதல்
  நாசுக்காகவா?
  என் வாழ்க்கை
  காசுக்காகாகவா?

  விட்டுவிடு என்னை
  தொலைகிறேன் நான்...

  - ரமேஷ் சிவஞானம்

 • என்காதல் என்னவென்று...

  காதலெனும் தூரிகை எடுத்து
  உன் மல்லிகைப் பூ மனதைத் தொட்டு
  வர்ணக் குழம்புகளாய்
  வரைந்து வைத்ததெல்லாம்
  காகிதப்பரப்பில்
  வெறும் நிழற்படங்கள் அல்ல - என்
  இதயப்பரப்பில்
  உன் பாதத் தடங்கள்.

  காதலெனும் களிமண் குழைத்து
  கண்ணீர் துளிகளை முத்தாய் இழைத்து
  கட்டியெழுப்பிய
  காதல் மாளிகை
  உளிகொண்டு செதுக்கிய
  சிற்பங்களாய் அல்ல - தமிழ்
  மொழி கொண்டு செதுக்கிய
  கவிதைகளாய்!

  காதலெனும் வானவில் வளைத்து
  வானத்து மீன்களையும் வரவழைத்து
  உன் நாணத்தில் தோய்த்து
  கயிறாகத் திரித்ததெல்லாம்
  நீட்டிய கழுத்தில்
  மாலைகளாய் அல்ல - வீணையில்
  மீட்டிய ராகங்களின்
  சோலைகளாய்!

  - விவிக்தா

 • மழைக்கால காதல்

  முற்றத்தில் நீ நீர் தெளிக்கையில்
  மழையென நான் மயங்கிய பொழுதிலிருந்து
  மழை பொழியும் பொழுதெல்லாம்
  மனதில் நீயே நீர் தெளிக்கிறாய்!

  நீயள்ளி முத்தமிட்ட குட்டிமழைதான்
  கடல் சேர்ந்த பின்னும்
  அலையென வந்து
  உன் கால் நனைத்து கொஞ்சுகிறது.

  மழை வரும் நேரம்
  தலை சுமக்கும் பூக்கள் நனையாமல்
  குடை பிடித்துக் கொள்ளத் தெரிந்த
  மல்லிகைச் செடி நீ!

  பெருமழையென முயங்கித் தீர்த்த பின்னும்
  மரக்கிளை மழை போல
  இரவு முழுவதும் தூறிக் கொண்டேயிருக்கின்றன
  உனது தூக்க முத்தங்கள்!

  இதழெங்கும் தீக்காயங்கள்.
  மழைக்காலத்தில் நீ சுட்ட
  அனல் முத்தங்களால்…

   

  - அருட்பெருங்கோ (http://blog.arutperungo.com)

 • காதலுடன் காத்திருப்பேன்

  காதலுடன் காத்திருப்பேன்
  எந்தனை ஆண்டுகள்
  எந்தன் உயிர் உனை பார்த்தது

  இத்தனை ஆண்டுகளில்
  எத்தனை முகங்கள் இடை வந்தன
  எத்தனை முகங்கள் கதை பேசின
  அதில் சில அழகிகளும் உண்டு
  சில அசிங்கங்களும் உண்டு

  ஆனால்
  என் இதயத்தில் உருவாய்
  ஓர் ஓரத்தில் உயிர் தாங்கும் கருவாய்
  நினைவுகளின் எச்சம் மட்டும்
  விழுங்கி உயிர்திருக்கும் - நீ
  நீ மட்டும் மறைவதே இல்லை
  இல்லை... இல்லை....
  நான் மறப்பதே இல்லை

  உண்மையில் ஐந்தோ, ஆறோ,
  நான் பேசிய வார்த்தைகள்
  உன்னிடம்

  ஆனால் கனவிலோ
  கதையாகவும்
  கவிதையாகவும் பேசியன
  ஆயிரம் ஆயிரம்

  இது நான் கொண்ட இனக்கவர்ச்சியல்ல
  உன் மேல் கொண்ட மனக்கவர்ச்சி
  இடைப்பட்ட ஆண்டுகளில் நீ
  எதிர்பட்டது ஒரு முறை
  அந்த ஒரு முறையில்
  நான்
  மறுமுறை பிறந்தேன்

  சொல்லாமல் விட்டுவிட்டால்
  செல்லாதே எனது காதல்

  போதும்...
  காதலோடு காத்திருந்த காலம் போதும்
  கவிதைகளோடு வாழ்ந்திருந்த காலம் போதும்

  காதல் கவிதையே !
  உன்னோடு வாழும் காலம் வேண்டும்
  உன்னிடம் சொல்லிவிடலாம்
  உன் காதலை அள்ளிவிடலாம் - என்று
  அன்புடன் அருகில் வந்தேன்

  ஆனால்
  உன் அன்னிய பார்வையில் என் ஆயுளையே
  முடித்துவிட்டாயடி பெண்ணே

  ஆயினும்
  ஆண்டுகள் பல ஆயினும்
  என் உயிர் என்னை விட்டு போகினும்
  உதிரும் ஒவ்வொரு துளி சாம்பலாக
  காற்றில் கலந்து காத்திருப்பேன்
  காதலுடன் காத்திருப்பேன்
  - தமிழ்மணி மாணிக்கம்
 • இதயத்தின் ஒரு பகுதி

   

  நனைந்த மாலை மழை பொழுதில்,

  வீதியோரம் பூத்திருக்கும் மலர்களில்,

  வானம் கொள்ளா வானவில் காணும்

  குழந்தையின் மழலை சிரிப்பில்,

  நெடுந்தூர பயணத்தின்

  ஜன்னலோர இருக்கையில்,

  மடியில் உறங்கும்

  மகளின் அணைப்பில்,

  என்றோ தொலைத்த இதயத்தின்,

  அழியாத ஒரு பகுதி......

  - கனவுசிற்பி

 • இது காதல் கடிதம் அல்ல...

  சிலந்தி கூடாய் சிக்கலாய் கிடந்த
  இதய கூட்டின் பூட்டு திறந்து
  குடிவந்து குத்து விளக்கேற்றி
  நித்தம் வந்து சுத்தம் செய்து
  சுகமாக்கி வைத்தவள் நீ...

  கனவில் புகுந்து குழந்தை  குட்டிகளோடு
  குடித்தனம் நடத்துபவள் நீ..
  இது உனக்கு எழுத்தும் காதல் கடிதமோ;
  வாடகை வசூலிக்கவேண்டி விண்ணப்ப கடிதோமோ  இல்லை...

  நீ என் வாழ்வுக்குள் வந்து விட்டதை
  வாசிக்கும்
  நேசிக்கும்
  யாசிக்கும்
  சுவாசிக்கும் கடிதம்.

  உன் முதல் தரிசனம்...
  புரிதலுக்கு தயாராகாத புத்தியை - சிறு
  புன்னகை   பூத்து என்னை புரட்டி போட்ட
  புனித காலம்...

  நத்தையின் வித்தை கற்ற
  மாநகரா(த) பேருந்து அது.

  தெரு கூத்தாடிகளின் வித்தையை
  வேடிக்கை பார்த்து காது மறத்து போன
  புதுமை பெண் ஒருத்தின் கையில்...

  பாலுக்காகவோ; ஆளுக்காகவோ
  பசிக்காகவோ; ஸ்பரிசத்திற்காகவோ
  வீம்புக்காகவோ; விதிக்காகவோ
  வீரியம் குறையாமல் - அப்போது
  அவளுக்கு தெரிந்த ஒரே
  மொழியான விசும்பலோடு
  கதறி கதறி அழுகை விற்று கொண்டிருந்தாள்,
  உன்னை போலவே ஒரு குட்டி தேவதை.

  கனவில் கண்ட கடவுள் போல் காட்சி தந்து
  பட்டாம்பூச்சி கண்காட்டி;
  பால் நிலவின் பாவம் காட்டி;
  படுத்துறங்கும் பனித்துளியின் ஸ்பரிசம் காட்டி;
  பகலை இரவாக்கி நித்திரை - இன்றி
  நிஜத்தை கனவாக்கி
  புகழுக்கு அடங்காத புயலை ஒரு
  பூ வந்து புன்னகை தொடுத்து
  பூமிக்குள் புதைத்துவிட்டு போவது போல்
  உன் குறிஞ்சி சிரிப்பால்
  வாங்கியே விட்டாய் அவள் விற்று வந்த அழுகையை ;
  நிறுத்தியே விட்டாய் அவள் கண்ணத்தில்
  நீந்தி நீண்டு வந்த நீர்துளியை.

  ஓய்ந்தது ஏன்னவோ மழலை
  உனர்ந்ததேன்னவோ மழயை.

  அவள் அந்த அற்புதங்களை அனுபவித்து - அடுத்த
  அழுகைக்கு ஆயத்தம் ஆகும்முன்
  அவிழ்த்து விட்டாய் அடுத்த அதிரடியை.

  காற்று மயிலிறகை கவனமாய் கையாண்டு - உன்
  கார்கூந்தல் தேடி இறகை இறக்குவதுபோல் அவள்
  இடையயை இதமாய் பற்றி உன் மல்லிகை மடிக்குள்
  மறைத்து கொண்டாய் மேகங்களுக்கிடையே
  பதுங்கிய பால்நிலவாய் அவள்.  நீ எதற்க்கோ ஆயத்தமாகிறாய்
  அவள் எதையொ எதிர்கொள்ள ஆயத்தமாகிறாள்.

  காரியத்தின் கண்ணீர் நனைத்த மீதியை
  வீரியத்தின் வியர்வையால்  அவளை  நனைத்திருந்தாள்.


  கைகளை கைக்குட்டையாக்கி
  நெற்றி ஒற்றி வியர்வை விலக்கினாய் .

  வண்ணம் வற்றி போன
  செம்மண் இதழ் குவித்து கொளுத்தி எடுத்த
  கொடை வெயிலின் சூட்டை சுளித்து வைத்த
  சுண்டுஇதழால் சுகமாய் இழுத்து சுவசத்தில் கலந்து
  சொடுக்கு பொழுதில் சமைத்து வெளிகொணர்ந்தாய்   
  வினொத தென்றல் ஒன்றை.

  குவித்த இதழ் குவித்தபடி இருக்க
  குளிரூட்டினாய் குழந்தை அவளை.

  செயற்கை குளிரூட்டி தெரியும் - இந்த
  இயற்கை குளிரூட்டி கண்டு வியப்பில் நான்.

  அப்படியொரு தென்றலின் முதல்
  பிரசவத்தை பருகிய உலகின் முதல்
  குழந்தை அவள்.

  ஏது!! இது இப்படியெ போனால்
  பூமியில் பூத்த பூக்கள் எல்லாம்
  புலம்பெயர்ந்து உன்
  வீட்டு விருந்துக்கு வந்துவிடுமடி  ஜாக்கிரதை .


  சிறுமி அவள் சிரித்து, சிரித்து
  சிலிர்த்து , சிலிர்த்து சின்னாபின்னமாகி;
  பனிக்கட்டியாய் உறைந்து போனால்.

  இறுதியாய் அவளின் மைக்ரொ உதட்டில்
  ஹய்க்ரொ முத்தமிட்டு மொத்தமாய்
  மூர்ச்சையாக்கினாய் ;
  அவளுக்கு அழுகை அன்னியமானது
  அவளின் அதரம் புன்னியமானது.


  அத்தோடு விட்டாய நீ…
  அண்ணம் அவளை அள்ளியேடுத்து - உன்
  மார்பென்னும் மந்தார
  கூட்டுக்குள் குழிதொண்டி புதைத்துகொண்டாய்.

  அவள்
  நிஜத்தை கடந்து
  நினைவுகளை துறந்து
  நித்திரைக்குள் நீண்டு போனாள்.

  அதை கண்ட கனத்திலே நானும் காணாமல் போனேன் ….
  - சீமான் கனி
 • காதல் கடிதம்

  என் காதலை
  உன்னிடம் சொல்ல
  ஆசைப்பட்டே
  கடிதம் எழுதினேன்.

  உனக்கு புரிந்துவிடுமோ
  என்று பயந்தே
  அதைக்
  கவிதையாய் எழுதினேன்.

  கவிதை புரிந்தால்,
  என் காதல் புரிந்தால்,
  உன்னைத் தந்துவிடு
  பரிசாய் எனக்கு.

  கவிதை மட்டுமே
  புரிந்தால்
  என் வரிகளை
  வாழ்த்திச் சென்றுவிடு.

  கவிதையும் புரியாது போனால்
  என் மடலோடு
  என்னையும் சேர்த்து
  என்னிடமே தந்துவிடு.

  வாய்மொழி ஏதுமின்றி
  விலகிச் சென்றுவிடு,
  விடைபெற வேண்டித்
  திரும்பியும் பாராதே.

  அன்றி, என்னிடம்
  கவிதையின் (என் காதலின்)
  பொருள் மட்டும்
  கேட்டுவிடாதே!

  என்னுள்
  புதைந்தே
  இறந்துவிடுவேன்
  நான்.

  - நதி
 • ஒரு தலைக் காதல்

  மூலையில் ஒளிந்து
  கொண்டிருந்த என்னை
  தேடிப்பிடித்து
  உயிர் கொடுத்து
  கரம்பிடித்து
  கவிதை வடிக்கச்சொன்னாய்
  உன் காதலிக்காக.

  நானோ
  என்னையே வடித்தேன்
  உன்னவளிடம்
  என்னை அறியாமல்.

  கவிதையெழுதிய
  காதல்கணங்களில்
  ஒரு தலைக் காதலுடன்
  நான் மட்டும்.

  - அன்புடன் எழுதுகோல்
  - ரம்யா

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி