கவிதை

தமிழ்ச் சொட்டும் கவிதைகள்!

இயற்கை

 • காற்று வெளியிடைக் கண்ணம்மா

  காற்று வெளியிடைக் கண்ணம்மா, - நின்றன்
  காதலை யெண்ணிக் களிக்கின்றேன் - அமு
  தூற்றினை யொத்த இதழ்களும் - நில
  வூறித் ததும்பும் விழிகளும் - பத்து
  மாற்றுப்பொன் னொத்தநின் மேனியும் - இந்த
  வையத்தில் யானுள்ள மட்டிலும் - எனை
  வேற்று நினைவின்றித் தேற்றியே - இங்கோர்
  விண்ணவ னாகப் புரியுமே!

  நீயென தின்னுயிர் கண்ணம்மா! - எந்த
  நேரமும் நின்றனைப் போற்றுவேன் - துயர்
  போயின, போயின துன்பங்கள் நினைப்
  பொன்னெனக் கொண்ட பொழுதிலே - என்றன்
  வாயினி லேயமு தூறுதே - கண்ணம்
  மாவென்ற பேர்சொல்லும் போழ்திலே - உயிர்த்
  தீயினி லேவளர் சோதியே - என்றன்
  சிந்தனையே, என்றன் சித்தமே!

  - சி. சுப்ரமணிய பாரதியார்
 • இறக்கையால் எழுதியது


  சொல்லித்தானாக வேண்டும்
  தத்தெடுப்பாரின்றி தனித்துப் போய்விட்ட எம் தீவுகளைப்பற்றி.

  சஞ்சீவி மலையை அனுமன் காவிச்செல்கையில்
  கடலிடைச்சிந்திய துண்டங்களாம்
  இத்தீவுகளைக் கவனியாமலேக
  கரைசேராத் திட்டுகளாய் தனித்திருந்தழுதனவாம்.

  கைவிடப்பட்ட துண்டங்களை கரைசேர்க்க யாருமில்லை.
  சஞ்சீவிமலையினின்றும் தூரித்த தீவுகளானோம் நாம்.

  சஞ்சீவி மலையின் துண்டங்கள் நம் தீவுகள் என்றால்
  விண்ணெழுந்து ராவணனைப் பொருதிய ஜடாயுவின்
  துண்டாடப்பட்ட இறக்கைகளாய் நாம்

  வெட்டுண்டோம்; வீழ்ந்தோம்
  கடல்வெளித் தனித்தலைகிற மிதவைகளாய்
  எக்கரையுமற்று எற்றுப்படுகின்றோம்.
  ஆயினும்
  வீழுமுன் விண்ணெழுந்து பொருதிய ஞாபகம்
  வெட்டுண்ட இறக்கைகளுக்கு இல்லையெனலாமோ?

  சஞ்சீவி மூலிக்காற்றே வா
  வெட்டுண்ட இறக்கைகளுக்கு உணர்வின் தைலமிடு
  எழுந்து பறந்ததாக வேண்டும்
  எம் முந்தைப் புலம் நோக்கி
  வெட்டுண்டு வீழுமுன் வீடிருந்த உச்சிப்புலம் அது.

  இறந்தாரை எழுப்பும் சஞ்சீவி கொணர
  அனுமனும் இங்கில்லை.
  இராமர்அணையும் கடலுள் அமிழ்ந்தாச்சு
  எம்முயிர்த்துவமே சஞ்சீவியாக
  எழுந்து பறந்தாகத்தான் வேண்டும்.

  -சு. வில்வரெத்தினம்

 • நிரந்தர நிழல்கள்

  நிரந்தர நிழல்கள்

   

  இருவாரங்களுக்கு முன் நாம் முகம் பார்த்த
  நிலவு இன்று உருத்தெரியாமல்..., அமாவாசையாம்.
  இன்று செடியின்கீழ் சருகாய், நேற்று நீ அரை
  மணி நேரம் கண்கொட்டாமல் ரசித்த செம்பருத்தி.
  சாஹித்திய நேரங்களில் நொடியில் மனதுள்
  ஜனித்து மரித்துப் போகும் கவிதைகள்
  கை குலுக்கும்போதே விடைப்பெற்றுப்
  போகும் புது அறிமுகங்கள்
  தேவைகளின் போதுமட்டும்
  தேடிவந்துப் போகும் நண்பர்கள்
  இப்படி நிரந்தரமில்லா நிழல்களிடையில்
  நிரந்தரமாய் நீயும், உன் நினைவுகளும் மட்டும்.

  - எட்வின் பிரிட்டோ

 • குருவிக் கூடு

  நிலத்தை ஆக்கிரமித்த தன் செயலுக்கு ஈடாக
  மொட்டை மாடியைத் தந்தது வீடு
  இரண்டடி இடத்தையே எடுத்துக் கொண்டு
  உயர்ந்து தன் அன்பை விரித்திருந்தது மரம்
  அந்த மரக்கிளையோடு அசையும்
  ஒரு குருவிக் கூடாய் அசைந்தது
  நான் அமர்ந்திருந்த அந்த மொட்டைமாடி

  - தேவதேவன் (காலச்சுவடு)

 • ஆனந்த அருவி

  அடர்ந்த மனஇருட்டில்
  அடுக்கடுக்கான மலையிடுக்கில்
  எங்கோ அடைபட்டுக் கிடக்கிறது
  ஆனந்த அருவியின் ஊற்று
  பாயும் இடமெங்கும் குளுமை
  பனிச்சாரல் ததும்பும் புகைமுட்டம்
  தாவி இறங்கும் வழிநெடுகத்
  தழுவிப் புரளும் குளிர்த்தென்றல்
  பாறையோ மரமோ செடியோ
  எதிர்ப்பட்டதை இழுத்தோடும்
  ஊற்றுக் கண்ணில் துருவேற
  ஊருராய் அலைகின்றேன்
  சுமைகூடி வலிகூடி
  இமைமுடாது திரிகின்றேன்
  உச்சிமலை அருவியின்கீழே
  உடல்நனைய மனம்நனைய
  ஒற்றைக் கணப்பொழுதில்
  துருவுதிர தடையுடைய
  பொங்கி வழிகிறது ஆனந்த அருவி
  தோள்தழுவி முகம்தழுவி
  இரண்டு அருவிகளும் இணைந்து வழிகின்றன
  இன்பச் சிலிர்ப்பை
  எடுத்துரைக்க மொழியில்லை
  ஆதிப் பாறையென
  அங்கேயே நிற்கின்றேன்
  அனைவரையும் தாண்டி
  வழிந்தோடுகிறது அருவி

  -  பாவண்ணன்

 • தேனருவி விஸ்வரூபம்

  தேனருவி விஸ்வரூபம்

  காற்றின் பனிவிரல் தீண்டி
  பச்சை இலைகள் சிலிர்த்துப் படபடக்க
  ஆயிரம் கிளைகள் நீட்டி
  ஆடுகின்றன காட்டுமரங்கள்

  பிரும்மாண்ட மலையின் மறைவில்
  பிறந்து பெருகும் அருவியைக் காண
  நூறு கனவுகளை உயிர்சுமக்க
  சருகுகள் மறைக்கும் தடம்தேடி
  நடக்கத் தொடங்குகிறோம் நாங்கள்

  பகலின் கதிர்சுடாத வானம்
  பால்மேகம் மிதக்கும் பாலம்
  பார்க்காதே பாரக்காதே எனக்
  கையசைத்துத் தடுக்கும்
  மரங்களும் கொடிகளும் பின்னிய கோலம்
  பக்கவாட்டில் ஒலிக்கிறது

  நீர்ப்பரப்பின் கொலுசுச்சத்தம்
  உச்சிக்கு அழைத்துச் செல்கிறது
  வழுக்குப் பாறைகளின் கூட்டம்

  பாதையின் கிளைகள் குழப்பிவிட
  பகல்முழுக்க அலைந்தலைந்து
  சலிப்பில் மனம்நொந்து வலிக்கு இதம்தேடி
  நிழல்பார்த்துச் சாய்கிறார்கள் சிலர்
  பாறைச் சரிவிலும் முள்ளுப்புதரிலும்
  கிழிபட்ட கால்சதையின் ரத்தம் கசிய
  ஆகாது ஆகாது என
  ஆயாசப் பெருமுச்சுடன்
  திடீரென முடிவை மாற்றி
  திரும்பி நடக்கிறார்கள் இன்னும் சிலர்
  செண்பக அருவியைக் கண்ட நிறைவோடு
  விடைபெற்று இறங்குகிறார்கள் மேலும் சிலர்

  ஈர்க்கப்பட்ட இரும்புத்துண்டென
  தொடர்ந்து நடக்கிறேன் நான்
  ஒவ்வொரு மரக்கிளையிலிருந்தும்
  பறவைகள் நடத்தும் இசைக்கச்சேரியில்
  குட்டிக் குரங்குகள் ஆடும் விளையாட்டில்
  உற்சாகம் ததும்பும் உள்ளம்

  உந்தித் தள்ளுகிறது என்னை
  நடுநடுவே சிற்றருவிக் கோலம்
  நம்பிக்கையூட்டி இழுக்கிறது
  அரைகுறையாய்க் கைக்கெட்டும்
  கல்முனையைத் தொட்டுப் பற்றி
  ஒன்றோடொன்று ஒட்டிக்கிடக்கும்
  பாறைக்குவியலில் திணறிநடந்து
  எங்கெங்கும் படர்ந்த பாசியின் வழுக்கலுக்குள்
  தடுமாறிக் கடந்து முச்சுவாங்க
  குன்றின் திருப்பத்தில் பளீரிடுகிறது
  உச்சிமலைத் தேனருவி

  எங்கெங்கும் ஈரம் தெறிக்க
  இசை மிதந்து வழிகிறது
  இமைமுடும் கணநேரம்
  என் உடலின் திரைச்சீலையில்
  சாரலின் தூரிகை படர்ந்து
  ஆனந்த ஓவியத்தைத் தீட்டுகிறது

  உச்சித் தண்ணீரில் சிறகை நனைத்து
  உல்லாசமாய்ப் பறக்கின்றன வண்ணத்துப்பூச்சிகள்
  பாதத்தில் நுரைபொங்கி வழியும் நீரில்
  தலைகுனிந்து நிற்கிறேன் நான்
  விண்ணையும் மண்ணையும் தொட்டபடி
  விஸ்வரூபமெடுத்து நிற்கிறது தேனருவி

  -பாவண்ணன்

 • மரங்களில் நான் ஏழை

  வாழை

   

  மனித மரங்களைப் பார்த்துப் பார்த்து
  மற்ற மரமெல்லாம் வேர்த்து வேர்த்து
  மனப் புழுக்கத்தின் குலுங்கல் - அதில்
  வந்து கனிந்தவை பழங்கள்!

  பகை மூட்டிப் பழுக்க வைக்கும்
  பழங்களினால் உலகில்
  பாக்கிஸ்தானில் நடந்தது போல
  பாகப் பிரிவிணை நடக்கும்

  புகை மூட்டிப் பழுக்க வைக்கும் - என்
  புரட்சிப் பழங்களினால்
  புண் வயிறு சிரிக்கும்
  பொலிவிழந்த உடல் செழிக்கும்

  மறுபடியும் உழைப்பதற்குப்
  புதுவலிமை பிறக்கும் 

  சீவாத தலையோடு பிறருடைய தலையைச்
  சிங்காரம் செய்வதற்குப் பூச்சாரங்கள் தொடுக்கும்
  பாவடைக் காரிகளின் நளின விரலோடு
  பழக்கமுள்ள நாருக்குப் படைப்பாளி நான்!

  அந்த நார்கள்
  என்னுடைய
  உடை உரிப்புக்கள்
  சத்தம் போடதா
  சதைக் கிழிசல்கள்!

  பூவைப் போல் உயர் பிறப்பு
  இல்லாத நாரை
  பூக்களுடன் சேர்த்து வைத்துச்
  சம மரியாதை
  வாங்கித் தந்ததென்
  சுய மரியாதை!

  என் மட்டைச் சட்டையோடு
  சேர்ந்த நாசிக்குச்
  சுறுசுறுப்புக் கொடுக்கும்
  மூக்குப் பொடியின்
  தூக்குத் தூக்கி!

  புகையிலைத் தூளின்
  பொட்டலப் பெட்டகம்!

  மரங்களில் நான் ஏழை - எனக்கு
  வைத்த பெயர் வாழை 

  - மு மேத்தா("வாழை மரத்தின் சபதம்")

 • பவளமல்லி

  http://www.flickr.com/photos/selians/

  நெடுநாள் வாடாது
  வண்ணம் காட்டித்திகழும்
  வாடாமல்லியாக வேண்டாம்
  ஒருநாள் தட்பவெப்பம் கூட
  தாக்குப்பிடிக்க வலுவின்றிப்
  பொட்டென்று
  பொசுங்கி உதிர்ந்தாலும்
  அந்நாள் முழுதும்
  மனம் நெகிழும் வாசம் தரும்
  பகட்டில்லா
  பவளமல்லியாகட்டும்
  இந்த ஜன்மம்.

  -  நீல. பத்மநாபன்

 • உதிரும் சிறகுகள்

   Thank You! http://www.havemuse.com/wp-content/uploads/2008/06/sf-ephemera-fresco1.jpg

  மழை ஓய்ந்த
  முன்னிரவில்
  சாளரத்தின் வழியே
  அறையில் புகுந்து
  மின் விளக்கை
  மொய்த்து
  முட்டி மோதி
  சிறகுகள் உதிர்த்து விழும்
  ஈசல் கூட்டம்
  காலையில்
  திட்டியபடியே
  செத்த உடல்களோடு
  சிறகுகள் கூட்டிக்
  குப்பையில் எறிந்து -
  ஏதோ இருளை
  மோகித்து
  ஏதோ சாளர வழியே
  நுழைந்து
  சிறகுகள்
  உதிர்க்கப் போவோம்
  நாம்.

  -  அப்துல் ரகுமான்

 • வசந்தத்தின் பாதை

   துளிர்க்கும் துளிர்கள்

  வசந்தத்தின் பாதை
  சுகமானதில்லை...

  சுட்டெரிக்கும் வெயிலும்
  பிரிந்து போகும் இலைகளும்
  வாழ்வில் சுவைப்பதில்லை...
  பின் துளிர்க்கும் துளிர்கள்
  எல்லாமும் தரும்...
  முதலில் நம்பிக்கை
  பின்
  பூ-காய்-கனி...
  ''விதைகளும்''

  - யுவபாரதி

 • சாலையோர நாவல் மரத்தடியில்

   Thank you! http://www.nparks.gov.sg/blogs/garden_voices/wp-content/2008/03/philips-nah-bael-tree-02.jpg

  காய்ந்த வயல்களிலே மேயும்
  செம்மறிகளைச் சீண்டி
  மின்சாரக் கம்பியில்
  ஊஞ்சலாடும்
  இரட்டைவால் குருவி விரட்டி
  துத்திப்பூ பறித்து தும்பி துரத்தி
  ஒடை வாராவதி கீழ்
  சேறு குழப்பி
  சாலையோர நாவல் மரத்தடியில்
  வந்து நின்று
  காற்றை அழைக்கிறான்
  ஆட்டுக்காரச் சிறுவன்
  காற்று பழங்களை உலுப்பியதும்
  கடைசியாய்ப் பிரியும் நண்பனின் பரபரப்பில்
  சேர்க்கிறான் பழங்களை
  தூரத்தில் ஒலிக்கின்ற
  சாலைபோடும் எந்திரத்தின்
  இரைச்சலைக் கேட்டபடி

  - அழகிய பெரியவன்

 • என் வீட்டுத் தோட்டம்

   என் வீட்டுத் தோட்டம்

  மயிர்க் கால்களில் மகரந்தம் விதைத்து,
  தென்னையின் தலைக்கோதிப் போகும்
  மார்கழி இளந்தென்றல்.

  'என்னருகே வா' என்று
  இறகுச் சிமிட்டும் பட்டாம்பூச்சி.

  துளித்துளியாய் அழகு சொட்டும்
  பனிப்பூத்த ரோஜா.

  அவ்வப்போது என்னைப்
  புன்னகைக்கச் சொல்லி
  புகைப்படமெடுத்துப் போகும்
  மின்மினிப் பூச்சிகள்.

  ஓடி வந்த வண்டுகளின் களைப்பு நீங்க
  தேன் குவளையேந்தும் மலர்ச்செடிகள்.

  கிளைகளினூடே விரல் நீட்டி
  நிழல் தொட்டுப் பார்க்கும் சூரியன்.

  பாடி முடித்த பறவைகளுக்கு
  பாராட்டுதலாய் கிளைத்தட்டும் மரங்கள்.

  இன்னும் பல இவைப்போல்
  வர்ணம் குழைத்துப் பூசுமென்
  கறுப்பு வெள்ளை வாழ்க்கைக்கு!

  - எட்வின் பிரிட்டோ

 • மாண்புமிகு மழையே!

  மாண்புமிகு மழையே!

  மாண்புமிகு மழையே! உனக்கொரு
  மடல்! நீ 
  எவ்வளவு பெய்தாலும்
  ஏற்க வல்லது
  கடல்கொண்ட
  குடல்;
  ஏற்க
  ஏலாதது
  குடல் கொண்ட
  உடல்!

  நீ பெய்யலாம்
  நூறு அங்குலம்; அன்னணம்
  பெய்தால் என்னணம்
  பிழைக்கும் எங்குலம்?

  அடை மழையே!
  அடை மழையே! உன்
  மடையை உடனே
  அடை மழையே!

  கொடுப்பதும் மழை;
  கெடுப்பதும் மழை;
  இது
  இரண்டாயிரம் ஆண்டுகள் முன் 
  தாடி வைத்த தமிழ்
  பாடி வைத்த தமிழ்!

  அளவோடு பெய்தால்
  உன்பேர் மழை;
  அளவின்றிப் பெய்தால் 
  உன்பேர் பிழை!

  தாகம் 
  தணிய....
  உன்னைக் குடித்தோம் என்றா
  எங்கள்
  உயிரை நீ குடிக்கிறாய்?
  மழைக்கே தாகமா?  எமனுக்கு
  மற்றொரு பெயர் மேகமா?

  சவத்தைக் குளிப்பாட்டினால் அது
  சடங்கு; நீ
  குளிப்பாட்டியதால் நிரம்புகிறதே சவக்
  கிடங்கு!
  நீரின்றி
  நிற்காது உலகு; எங்கும் 
  நீராகவே இருந்தாலும்
  நிற்காது உலகு!

  பூகம்பம்;
  புகைவண்டி;
  புயல் வெள்ளம்;

  என
  ஏனிப்படி...

  குஜராத்தைக்
  குறி வைத்து 
  இடையறாது தாக்குகிறது
  இயற்கை? உன்னொத்த
  இயற்கையைத் தண்டிக்காது
  இருப்பதேன் இறைக்கை?

  விண்ணிலிருந்து 
  வருவது தண்ணீர்;
  கண்ணிலிருந்து
  வருவது கண்ணீர்;
  எனினும்
  எஞ்ஞான்றும் 
  தண்ணீரைப் பொறுத்தே
  கண்ணீர்!

  தெய்வம்
  தொழாது 
  கொழுநன்
  தொழுவாளைப் போலே...
  மழையே!
  மாந்தர் 
  பெய் எனும்போது
  பெய்; உனது 
  பெயரை என்றும்
  பெயராமல் வை!

  - வாலி

 • தங்க நிலவே...தேன் சிந்து!

   Thank you! http://moongazinghareillustration.blogspot.com/

  அன்னமே,
  உன் பார்வை
  கொள்ளை கொண்டதே
  என்னையே

  செல்லமே,
  உன் மழலை
  தென்றலாய் என் நெஞ்சிலே

  பஞ்சு போன்ற பாதத்தில்
  தஞ்சம் கேட்டு ஓடி வந்து
  தாயின் மடிப்புகுந்து
  சிரிப்பாய்

  வானமே உன்னைத் தாலாட்ட
  ஆனந்தமாய் கண்மூடிக்கொள்

  முத்து முத்தாய் முத்தம்
  நீ
  முகத்தில் தந்தாய் நித்தம்

  தித்திக்க தித்திக்க நீ பேச
  கன்னக்குழி இரண்டும்
  கதைகள் பல பேசும்.

  சொன்னச் சொல்லை
  மீண்டும் நீ சொல்ல
  உன் கண்கள் கூட கவி பாடும்

  தங்க நிலவே
  இன்றுபோல் என்றும் நீ
  தேன் சிந்து
  என் வாழ்க்கையில்!

  - அபிசேகா

 • விவசாயியின் வி(உ)ளைச்சல்

   விவசாயியின் வி(உ)ளைச்சல்


  அரசியல்வாதிகளே நில்லுங்கள்
  தேசியமயமாக்கலே
  நொண்டியடிக்கும்போது
  உலகமயமாக்கலுக்காய்
  ஏன் இந்த ஓட்டம்?

  அண்டை மாநிலத்திடமிருந்து
  நீர் வாங்க வக்கில்லாதபோது
  அமெரிக்காவிடமிருந்து
  ஆயுதம் வாங்க மட்டும்
  ஆளாய் பறப்பதேன்?

  ஒன்று எங்கள் நிலத்திற்கு
  நீர் வார்த்துப் போங்கள்,
  இல்லை எங்களுக்கு
  பால் வார்த்துப் போங்கள்.

  நீர் இருப்பதில்லை
  நீர் இருந்தால்
  மின்சாரம் இருப்பதில்லை.

  விளைச்சல் இருப்பதில்லை
  விளைச்சல் இருந்தால்
  விலை இருப்பதில்லை.

  இனி எங்கள் கடனோடு சேர்த்து
  எங்களையும் தள்ளுபடி செய்யுங்கள்
  விலை போவதற்கு
  என்ன இருக்கிறது?
  எங்களைத் தவிர.

  யானை கட்டி
  போரடித்த மண்ணில்
  காலிப் பானை
  உருட்டும் எங்கள் பிள்ளைகள்.

  விதை நெல்லுக்கும்
  காப்புரிமைக் கேட்கும்
  உங்கள் உலகமயமாக்கலில்
  எங்களை அடித்து
  உளையில் போடும்
  தேசியம் வெறும் வேசியம்.

  கர்நாடகா பொன்னியும்
  பஞ்சாப் கோதுமையும்
  மைசூர் பருப்பும்
  தீர்க்கட்டும் இனியென்
  தமிழ்நாட்டுப் பசியை.

  சரி எங்கள்
  வீட்டுப் பட்டிணி?
  எப்பொழுதும் போல்
  எங்களோடே
  பிறந்து இறந்தும் போகட்டும்

  - பாண்டூ, சிவகாசி.

 • வ‌ழியும் மாலை நேர‌ம்  தழுவும் ஈரக்காற்றில்
  இலைகளை உதிர்த்தவண்ணமிருகின்றன
  மிக உயர்ந்த யூக‌லிப்டஸ் மரங்கள்.

  யாருமற்ற தெருக்களில்
  அலைந்து தொலைகின்றன வெள்ளை நிழல்களும்
  கருத்த மழை முகில்களும்.

  எங்கிருந்தோ வந்து
  எனைக் கடந்தபடி இருக்கின்றன
  பெரிய நீல‌ வண்ணத்துப்பூச்சிகள்.

  குடைகளுக்குள்
  யாரோ பேசிய‌வாறு போகிறார்கள்
  எதையோ.

  மழைநீர் கோர்த்த
  பசுந்த கிளைகளை உலுக்க
  சிதறுகிறது

  குளிர்ந்த கின்னர இசையொன்று.
  இன்றும் சந்திக்க நேருகிறது

  நீயற்ற வேளைகளை.
  யாரிடமும் பேச தோனுவதில்லை.

  சூழும் தனித்த இரவை
  தடுத்து நிறுத்த வழியேதுமின்றி நானிருக்க
  ச‌ன்னல் கண்ணாடியில் மழைநீராய்
  உருகி வழிகிறது இம்மாலை மழை நேரம்.

  - நளன்

 • கண்ணாடிக் குளம்

  நீ வருவதற்காக
  காத்திருந்த நேரத்தில் தான்
  பளிங்கு போல்
  அசையாதிருந்த தெப்பக் குளம்
  பார்க்க ஆரம்பித்தேன்.
  தலைகீழாய் வரைந்து கொண்ட
  பிம்பங்களுடன்
  தண்ணீர் என் பார்வையை
  வாங்க்கிக் கொண்டது முற்றிலும்;
  உன்னை எதிர்பார்ப்பதையே
  மறந்துவிட்ட ஒரு கணத்தில்
  உன்னுடைய கைக்கல் பட்டு
  உடைந்தது கண்ணாடிக் குளம்.
  நீ வந்திருக்க வேண்டாம்
  இப்போது.

  - கல்யாண்ஜி

 • பூக்களும் காயம் செய்யும்

   

  போடி போடி கல்நெஞ்சி!

  மார்புக்கு ஆடை
  மனசுக்கு பூட்டு

  ஒரே பொழுதில்
  இரண்டும் தரித்தவளே!

  காதல் தானடி
  என்மீதுனக்கு?

  பிறகேன்
  வல்லரசின்
  ராணுவ ரகசியம்போல்
  வெளியிட மறுத்தாய்?

  தூக்குக்கைதியின்
  கடைசி ஆசைபோல்
  பிரியும்போது ஏன்
  பிரியம் உரைத்தாய்?

  நஞ்சு வைத்திருக்கும்
  சாகாத நாகம்போல்
  இத்தனை காதல் வைத்து
  எப்படி உயிர் தரித்தாய்?

  இப்போதும் கூட
  நீயாய்ச் சொல்லவில்லை
  நானாய்க் கண்டறிந்தேன்

  இமைகளின் தாழ்வில் -
  உடைகளின் தளர்வில் -

  என்னோடு பேசமட்டும்
  குயிலாகும் உன்குரலில் -

  வாக்கியம் உட்காரும்
  நீளத்தில் -
  வார்த்தைகளுக்குள் விட்ட
  இடைவெளியில் -

  சிருங்காரம் சுட்ட
  பெருமூச்சில்

  வறண்ட உதட்டின்
  வரிப்பள்ளங்களில் -

  நானாய்த்தான் கண்டறிந்தேன்
  காதல் மசக்கையில்
  கசங்கும் உன் இதயத்தை.

  சேமித்த கற்பு
  சிந்தியா போயிருக்கும்?

  நீயாக கேட்டிருந்தால்
  நெஞ்சு மலர்ந்திருப்பேன்

  உண்டென்றால்
  உண்டென்பேன்
  இல்லையென்றால்
  இல்லையென்பேன்

  இப்போதும் கூட
  தேசத்துரோகமென்பதை
  ஒப்புக்கொள்ளாத தீவிரவாதி மாதிரி

  உள்ளாடும் காதலை
  ஒளிக்கவே பார்க்கிறாய்

  காதலில்
  தயக்கம் தண்டனைக்குரியது
  வினாடி கூட
  விரயமாதல் கூடாது

  காலப் பெருங்கடலில்
  நழுவி விழும் கணங்களை
  மீண்டும் சேகரிக்க
  ஒண்ணுமா உன்னால்

  இந்தியப் பெண்ணே!
  இதுவுன்
  பலவீனமான பலமா?
  பலமான பலவீனமா?

  என்
  வாத்தியக்கூடம்வரை
  வந்தவளே

  உன் விரல்கள்
  என் வீணைதடவ வந்தனவா?

  இல்லை
  புல்லாங்குழல் துளைகளைப்
  பொத்திப்போக வந்தனவா?

  என் நந்தவனத்தைக்
  கிழித்துக்கொண்டோடிச்
  சட்டென்று வற்றிவிட்ட நதி நீ

  உன் காதலறிந்த கணத்தில்
  என் பூமி பூக்களால் குலுங்கியது

  நீ வணங்கிப் பிரிந்தவேளை
  என் இரவு நடுங்கியது

  பிரிவைத் தயாரித்துக் கொண்டுதானே
  காதலையே அறிவித்தாய்

  இருபதா? முப்பதா?
  எத்தனை நிமிடம்?
  என் மார்பு தோய்ந்து நீ
  அழுததும் தொழுததும்

  என் பாதியில்
  நீ நிறையவும்
  உன் பாதியில்
  நான் நிறையவும்
  வினாடித்துகள் ஒன்று
  போதுமே சிநேகிதி

  நேரம் தூரம் என்ற
  தத்துவம் தகர்த்தோம்

  நிமிஷத்தின் புட்டிகளில்
  யுகங்களை அடைத்தோம்

  ஆலிங்கனத்தில்
  அசைவற்றோம்

  உணர்ச்சி பழையது
  உற்றது புதியது

  இப்போது
  குவிந்த உதடுகள்
  குவிந்தபடி
  முத்தமிட நீயில்லை

  தழுவிய கைகள்
  தழுவியபடி
  சாய்ந்து கொள்ள நீயில்லை

  என் மார்புக்கு வெளியே
  ஆடும் என் இதயம்
  என் பொத்தானில் சுற்றிய
  உன் ஒற்றை முடியில்

  உன் ஞாபக வெள்ளம்
  தேங்கி நிற்குது
  முட்டி அழுத்தி நீ
  முகம்பதித்த பள்ளத்தில்

  தோட்டத்துப் பூவிலெல்லாம்
  நீ விட்டுப்போன வாசம்

  புல்லோடு பனித்துளிகள்
  நீவந்துபோன அடையாளமாய்க்
  கொட்டிக் கிடக்கும்
  கொலுசுமணிகள்

  நம் கார்காலம்
  தூறலோடு தொடங்கியது
  வானவில்லோடு நின்றுவிட்டது

  உன் வரவால்
  என் உயிரில் கொஞ்சம்
  செலவழிந்து விட்டது

  இந்த உறவின் மிச்சம்
  சொல்லக்கூடாத
  சில நினைவுகளும்

  சொல்லக்கூடிய
  ஒரு கவிதையும்.

   

  -வைரமுத்து

 • இளவேனிற் காலம்

  தோல்விக்கு
  விடைகொடு
  வெற்றியைப்
  பிடித்துக்கொள்

  கோடை காலத்தில்
  வருந்தாதே
  உனக்காகக் காத்திருக்கிறது
  இளவேனிற் காலம்

  உழைப்பை நம்பு
  காலம் உனக்கு
  கை கொடுக்கும்
  எதிலும் கூர்ந்து கவனி
  எதிலும்கற்றுக் கொள்ளலாம் பாடம்.

  - ஆர். ஈஸ்வரன், வெள்ளகோவில்

 • மீண்டும் பேரலை

  மரணம் விதைக்கப்பட்ட
  வன்னி வள நாட்டில்
  காட்டாறாய் செங்குருதி

  மண்டை ஓடுகள்
  ஒதுங்கிப் பிணைந்து
  நதியில் விழுகின்றது!

  குண்டுகள் துளைத்த
  பதுங்கு குழிகளிலிருந்து
  பீறுட்டுப் பாய்கின்றது
  விதைப்புக்காய்க் காத்திருந்த
  மண்டை ஓடுகள்!

  நதியும் ஆறும்
  கலந்தே வீழ்கின்றது
  இந்து மா கடலில்!

  தொலைவிலிருந்து சில
  புலம்பல்களும் ஓலங்களும்
  பெரிதாக ஓலிக்கின்றது.

  உலகச் செவிப்பறைகளின்
  கதவுகள் அடைப்பட்டே
  கிடக்கின்றது
  ஈழத்தமிழரின்
  சுதந்திரத்தைப் போல்
  இறைமையைப் போல்
  உரிமையைப் போல்

  ஆயினும்
  இந்து மா கடல்
  மண்டைகளையும்
  முண்டங்களையும்
  விழுங்கி விழுங்கி
  பேரலையாய்
  உயர்ந்து உயர்ந்து
  உக்கிரம் கொள்கின்றது

  - மாவலன்

படைப்புகளை வெளியிட

 உங்கள் கவிதையை இந்த இணையதளத்தில் வெளியிட விரும்பினால் "இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் " என்ற முகவரிக்கு மின்-னஞ்சல் செய்யுங்கள் அல்லது இந்த இணைப்பில் உங்கள் கவிதைகளைப் பதியுங்கள். தயவுசெய்து தங்கள் கவிதையை தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

கவிதைச் சார்ந்த

 

இன்றைய கவிதை

பயனாளர் பகுதி